/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே சுரங்கப்பாதை இரும்பு தடுப்பில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
/
ரயில்வே சுரங்கப்பாதை இரும்பு தடுப்பில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை இரும்பு தடுப்பில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை இரும்பு தடுப்பில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 05, 2025 01:22 AM

பொன்னேரி:ரயில்வே சுரங்கப்பாதையில், கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க பொருத்தப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதித்தது.
பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், திருவாயற்பாடி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
மெதுார், கோளூர், பெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த சுரங்கப்பாதை வழியாக பொன்னேரிக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த மாதம் 24ம் தேதி, இந்த சாலையில் பயணித்த கான்கிரீட் சிமென்ட் கலவை ஏற்றி வந்த லாரி, சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரத்திற்கு பின், லாரி பின்நோக்கி நகர்த்தப்பட்டது.
இதையடுத்து, கனரக வாகனங்கள் சுரங்கப்பாதையில் செல்வதை தடுக்க, ரயில்வே நிர்வாகம் இரும்பு தடுப்புகளை அமைத்தது. இது, சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு 50 மீ., முன் ,பொருத்தப்பட்டிருந்தது.
நேற்று திருவாயற்பாடியில் இருந்து, பொன்னேரி நகருக்குள் செல்வதற்காக வந்த லாரி ஒன்று, புதிதாக பொருத்தப்பட்ட இரும்பு தடுப்புகளில் சிக்கியது.
இதில், இரும்பு தடுப்பு இரண்டாக உடைந்தது. இந்த தடுப்புகள் சாலையின் நடுவே அந்தரத்தில் தொங்கியதால், இருபுறமும் போக்குவரத்து பாதித்தது.
பொன்னேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாகன நெரிசலை சீரமைத்தனர். ரயில்வே ஊழியர்கள் உடைந்த தடுப்புகளை அகற்றி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.