/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் ஏற்படுத்த ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
/
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் ஏற்படுத்த ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் ஏற்படுத்த ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் ஏற்படுத்த ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : டிச 31, 2024 01:11 AM
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகும். கும்மிடிப்பூண்டி -- சென்னை சென்ட்ரல் இடையே தினசரி, 40க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அவற்றில் சிப்காட் தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என, தினசரி பல்லாயிரக்கணக்கான பயணியர் பயணிக்கின்றனர்.
மேலும், மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின்கீழ், 25 கோடி ரூபாய் செலவில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொடர் குற்ற சம்பவங்களால் ரயில் பயணியர் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
கல்லுாரி மாணவர்கள் இடையே மோதல், செயின், மொபைல்போன்கள் பறிப்பு, ஈவ் டீசிங், ரயில் நிலையத்தில் டூ - -வீலர் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
புகார் கொடுக்க சென்று வரும் தொலைவில் ரயில்வே போலீஸ் நிலையம் இல்லாததால், பல குற்ற சம்பவங்கள் வெளியே தெரிய வராமல் உள்ளன.
உதாரணத்திற்கு, ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஒரு அசம்பாவிதம் நடந்தால், அங்கிருந்து, 58 கி.மீ., தொலைவில் உள்ள கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு புகார்தாரர் செல்ல வேண்டும்.
மேலும், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், நீண்ட துார ரயில் பாதையில் கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஆள் பற்றாக்குறை இருப்பதால், பொன்னேரியில் உள்ள புறகாவல் நிலையத்தையும் முறையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
அனைத்து வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டு வரும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
அப்படி அமைத்தால், மீஞ்சூரில் இருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி முதல், ஆரம்பாக்கம் வரை உள்ள, 36 கி.மீ., தொலைவை எளிதாக கண்காணித்து ரயில் பயணியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும் என, ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.