/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் இரவில் வழிப்பறி திருடர்களால் பீதியில் ரயில் பயணியர்
/
திருவாலங்காடில் இரவில் வழிப்பறி திருடர்களால் பீதியில் ரயில் பயணியர்
திருவாலங்காடில் இரவில் வழிப்பறி திருடர்களால் பீதியில் ரயில் பயணியர்
திருவாலங்காடில் இரவில் வழிப்பறி திருடர்களால் பீதியில் ரயில் பயணியர்
ADDED : ஜூன் 01, 2025 09:07 PM
திருவாலங்காடு:சென்னை ---- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், அரிசந்திராபுரம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 50,000க்கும் மேற்பட்டோர் தினமும் சென்னை, அரக்கோணம் சென்று வருகின்றனர்.
'பீக் ஹவர்ஸ்' தவிர மற்ற நேரங்களில், 100 - 300 பயணியர் இரவு 12 மணி வரை ரயிலில் இருந்து ஏறி, இறங்கி சென்று வருகின்றனர். இந்நிலையில், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு, பல்வேறு ஊர்களில் இருந்து ரயிலில் செல்வோர் மது வாங்கி அருந்தி செல்கின்றனர்.
அப்படி, மதுபோதையில் ரயில் ஏற செல்லும் வெளியூர் நபர்களை பின்தொடர்ந்து சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் மறித்து பணம், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை மர்மகும்பல் பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் வரும் பயணியரையும் மிரட்டி, பணம் பறிப்பில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மது அருந்தி செல்வோர் இரவில் தனியாக வரும் நபர்களை மட்டும் குறிவைத்து வழிப்பறி செய்கின்றனர். அவர்களிடம் பெரிய அளவில் பணம் இருப்பதில்லை. 500 - 1,000 ரூபாய் வரை வழிப்பறி செய்து செல்கின்றனர்.
சிறு தொகை என்பதாலும், ரயிலுக்கு அல்லது இரவில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதாலும், பலர் புகார் அளிப்பதில்லை.
இதனால், வழிப்பறி கும்பல் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே, ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.