/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடுக்கடலில் நடந்த மோதலில் இருவர் காயம்கொந்தளிப்பு!:பழவேற்காடில் மீனவர்கள் தொடர் போராட்டம்
/
நடுக்கடலில் நடந்த மோதலில் இருவர் காயம்கொந்தளிப்பு!:பழவேற்காடில் மீனவர்கள் தொடர் போராட்டம்
நடுக்கடலில் நடந்த மோதலில் இருவர் காயம்கொந்தளிப்பு!:பழவேற்காடில் மீனவர்கள் தொடர் போராட்டம்
நடுக்கடலில் நடந்த மோதலில் இருவர் காயம்கொந்தளிப்பு!:பழவேற்காடில் மீனவர்கள் தொடர் போராட்டம்
ADDED : ஆக 06, 2024 02:26 AM

பழவேற்காடு:பழவேற்காடு கடலில் வெளிமாவட்ட விசைப்படகு மீனவர்கள், எல்லை மீறி மீன்பிடி தொழில் செய்வதால், அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. நேற்று நடந்த இரு தரப்பு மோதலில் 2 மீனவர்கள் காயமடைந்தனர். இதனால், பழவேற்காடில் பதற்றம் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டு, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப்பகுதியில், 15 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் பைபர் படகுகளில், 8-10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
கடந்த சில தினங்களாக, வெளி மாவட்டங்களை சேர்ந்த அதிவேக திறன் கொண்ட விசைப்படகுகளில் வரும் மீனவர்கள், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு அருகில் பைபர் படகுகள் தொழில் செய்யும் இடங்களில், மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
இதனால், பழவேற்காடு பகுதி மீனவர்களுக்கு மீன்கள் ஏதும் கிடைக்காமல் வருவாய் இழப்பிற்கு ஆளாகினர். இது குறித்து மீன்வளத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை
தொடர்ந்து விசைப்படகுகள் பழவேற்காடு கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தன. கடந்த மாதம், 20ம் தேதி, பழவேற்காடு கடல் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரை சேர்ந்த விசைப்படகு ஒன்றில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அதையடுத்து, பழவேற்காடு பகுதி மீனவர்கள், 20க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று, விசைப்படகில் இருந்த, 34 பேரை சிறை பிடித்து பழவேற்காடு கரைக்கு அழைத்து வந்தனர்.
மீன்வளம், வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் பேச்சை தொடர்ந்து, சிறை பிடித்து வரப்பட்ட, 34 மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தொழில் பாதிப்பு
இப்பிரச்னை தொடர்பாக பழவேற்காடு மற்றும் வெளிமாவட்ட மீனவர்களிடையே பேச்சு நடத்தி, உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கடந்த, 3ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம், வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், ஒன்பது கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்திலும், 'அதிகவேக திறனுடைய விசைப்படகுகள் வேகமாக இயக்குப்படுவதால், நாட்டுப்படகுகள் மற்றும் வலை சேதமாகின்றன.
விசைப்படகுகள் கரையோர பகுதியில் மீன்பிடிப்பதால், நாட்டுப்படகு மீனவர்களின் தொழில் பாதிக்கிறது.
கடலோர காவல் படை வாயிலாக, எல்லை தாண்டும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
மீன்வளத்துறை அதிகாரிகள், எல்லை தாண்டி மீன்பிடிக்கும், மீனவர்கள் கண்டறியப்பட்டு, அபராதம், படகு பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று பழவேற்காடு கூனங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் மீன்பிடிக்க சென்ற இடத்தில், வெளிமாவட்ட விசைப்படகுகளில் வந்த மீனவர்கள் வலைவிரித்து மீன்பிடித்துக்கொண்டிருப்பதை கண்டனர்.
வெளிமாவட்ட மீனவர்கள்
அதையடுத்து, அங்கிருந்த மூன்று விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். விசைப்படகில் இருந்தவர்களிடம், கேட்டபோது சரியான பதில் இல்லை.
இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் விசைப்படகில் இருந்த மீனவர்கள், பழவேற்காடு பகுதி மீனவர்களை தாக்கி உள்ளனர்.
இதில், கூனங்குப்பத்தை சேர்ந்த லோகேஷ், 25, பிரதாப், 32, ஆகியோர் காயம் அடைந்தனர். அதன்பின், விசைப்படகுகள் அங்கிருந்து ஒவ்வொன்றாக வேகமாக சென்றுவிட்டன.
காயம் அடைந்தவர்களை மீட்டு, பழவேற்காடு பகுதி மீனவர்கள் கரை திரும்பினர். உடனடியாக அவர்கள் பழவேற்காடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னை திருவொற்றியூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பழவேற்காடு மீனவர்கள் நடுக்கடலில், வெளிமாவட்ட மீனவர்களால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த மீனவர்கள் பழவேற்காடு மருத்துவமனை மற்றும் பஜார் பகுதியில் குவிந்தனர். அங்கு பதற்றம் நிலவியதால், கடைகள் அடைக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக இப்பிரச்னை நீடித்து வரும் நிலையில், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, மீனவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பொன்னேரி - பழவேற்காடு சாலையில், மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, பொன்னேரி தாசில்தார் மதிவாணன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விசைப்படகுகள் பழவேற்காடு பகுதிக்கு இருப்பது குறித்து தகவல் தெரிவித்தால், உடனடியாக காவல், மீன்வளம், கடலோர காவல்படையினர் அங்கு சென்று ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
நடவடிக்கை வேண்டும்
அதிநவீன விசைப்படகுகளையும், தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தும்போதும் பழவேற்காடில் மீன்வளம் முழுமையாக பாதிக்கிறது.
மீன்பிடி தொழில் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் விசைப்படகுகள் மீது அபராதம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ள நிலையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
விசைப்படகுகள், பழவேற்காடு பகுதியில் மீன்பிடி தொழில் செய்வதை தடுக்க வேண்டும். தகவல் தெரிவித்தால், உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரை மகேந்திரன்
தலைவர், தமிழ்நாடு மீனவர் சங்கம் பழவேற்காடு