/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரம்...கேள்விக்குறி: மெதுார் ஏரியை துார்வாரததால் தட்டுப்பாடு அபாயம்
/
பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரம்...கேள்விக்குறி: மெதுார் ஏரியை துார்வாரததால் தட்டுப்பாடு அபாயம்
பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரம்...கேள்விக்குறி: மெதுார் ஏரியை துார்வாரததால் தட்டுப்பாடு அபாயம்
பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரம்...கேள்விக்குறி: மெதுார் ஏரியை துார்வாரததால் தட்டுப்பாடு அபாயம்
ADDED : மார் 12, 2025 06:58 PM

பொன்னேரி: பழவேற்காடு மீனவ கிராமங்களுக்கு, பொன்னேரி அடுத்த மெதுார் ஏரியின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஏரி வறண்டு கிடப்பதால், ஆழ்துளை கிணறுகள் செயலிழக்கும் நிலையில், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில், 900 ஏக்கர் பரப்பு பாசன ஏரி உள்ளது.
பழவேற்காடு மீனவப்பகுதியில் உள்ள கோட்டைகுப்பம், தாங்கல் பெரும்புலம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 23 கிராமங்களுக்கு, மெதுார் ஏரியின் கரையோரங்களில் ஆழ்துளை மோட்டார் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக, இப்பகுதியில், 24 ஆழ்துளை மோட்டார்கள் அமைத்து தினமும், 16.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மீனவப்பகுதியில் உள்ள கிராமங்கள் கடல் பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால், ஆழ்துளை மோட்டார்கள் வாயிலாக கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பாக இருப்பதால், மெதுாரில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதை மீனவ கிராமத்தினர் சமைக்க, குளிக்க, குடிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
மீனவ கிராமங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக மெதுார் ஏரி அமைந்து உள்ள நிலையில், இதை முறையாக பராமரிக்காமல் இருப்பதால், கோடைக்கு முன்பே வறண்டு கிடக்கிறது.
ஏரியில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை மோட்டார்கள் அவ்வப்போது செயல் இழக்கின்றன.
இதனால் குடிநீரில் உவர்ப்புத்தன்மை ஏற்பட்டு, மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
மாற்று இடத்தில் புதிய கிணறுகள் அமைக்கப்பட்டு, கூடுதல் ஆழத்தில் குடிநீர் உறிஞ்சப்படுகிறது.
இதுவரை, 50க்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் உவர்ப்பு தன்மையால் மூடப்பட்டு புதிய இடங்களில் அவை அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கிராமங்களில் குடிநீர் வினியோகமும் சீராக இருப்பதில்லை.
மெதுார் ஏரியில் மழைநீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத சூழலில், 23 மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.
மேலும், மெதுார் ஏரியை சுற்றிலும் மேலப்பட்டறை, கொள்ளுமேடு, அரசூர், காட்டாவூர், கொக்குமேடு ஆகிய கிராமங்களில், 600 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.
மழைக்காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயமும் பாதிக்கிறது.
இது குறித்து விவசாயிகள் தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இன்றி கிடப்பதாக அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
மெதுார் ஏரிக்கு வரும் வரத்துக்கால்வாய்கள் துார்ந்து கிடக்கின்றன. ஏரியிலும் வண்டல் மண் அதிகரித்துவிட்டது. மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. அங்குள்ள ஆழ்துளை மோட்டார்களிலும் கிடைக்கும் தண்ணீரில் உவர்ப்பு தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் மழையை நம்பி விவசாயம் செய்யும் நிலைக்கு வந்து உள்ளோம்.
கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 85 - 90 அடியில் நல்ல தண்ணீர் கிடைத்த நிலையில், தற்போது, 180-200அடி வரை போர்வெல் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கான பல லட்சம் செலவிட முடியாமல், விளைநிலங்களை தரிசாக போட்டுள்ளோம்.
ஏரியை ஆழப்படுத்த வேண்டும். ஆரணி ஆற்றில் இருந்து மழைநீரை கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏரியில் முழுமையாக தண்ணீரை தேக்கி வைத்தால், பழவேற்காடு மீனவ கிராமங்களில் குடிநீர் தட்டுபாட்டு ஏற்படாது. விவசாயமும் பாதிக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்ட முன்மொழிவு
மெதுார் ஏரியை ஆழப்படுத்துவது மற்றும் வரத்துக்கால்வாயை துார்வாருவது தொடர்பாக திட்ட முன்மொழிவு தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். நிதி ஆதாரம் கிடைத்தபின், அதற்கான பணிகள் துவங்கப்படும்.
நீர்வள ஆதாரத்துறை அதிகாரி
பொன்னேரி.
குடிநீரில் உவர்ப்பு தன்மை
பழவேற்காடு பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை. மெதுாரில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரில் உவர்ப்புத்தன்மை இருப்பதால் அதில் சமைக்க முடியவில்லை. டிராக்டர்களில் இருந்து கொண்டு விற்பனை செய்யப்படுவதையும், கேன்களை அடைத்து விற்கப்படுவதையும் வாங்கி பருகும் நிலையில் உள்ளோம். மெதுார் ஏரியை ஆழப்படுத்தி, அதிகளவில் மழைநீர் தேக்கி வைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி. நித்யானந்தம்
பழவேற்காடு