நிரம்பி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர் திருமழிசையில் நிரந்தர தீர்வு எப்போது?
நிரம்பி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர் திருமழிசையில் நிரந்தர தீர்வு எப்போது?
UPDATED : நவ 21, 2026 08:04 PM
ADDED : நவ 21, 2026 08:04 PM

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில், பாதாள சாக்கடையில் இருந்து, கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுவதால், அப்பகுதி மக்கள் தொற்று நோய் அபாயத்தில் தவித்து வருகின்றனர். எனவே, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், 40.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2007ல் ஆண்டு சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் தொடங்கப்பட்டு, 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.
பணிகள் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும், தற்போது வரை பாதாள சாக்கடையின் பல்வேறு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு, மேல் மூடி வழியாக குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.
இதனால் துார்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி நுழைவாயில் முன் உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாக, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
அருகிலேயே பேரூராட்சி அலுவலகம் இருந்தும், தற்போது வரை கழிவுநீர் வழிந்தோடுவதை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு எடுக்காதது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
