/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிழை இருந்தால் எந்த துறைக்கு செல்வது? 'பந்தாடும்' அதிகாரிகளால் பெற்றோர் திணறல் முகாம் அமைக்க வலியுறுத்தல்
/
பிழை இருந்தால் எந்த துறைக்கு செல்வது? 'பந்தாடும்' அதிகாரிகளால் பெற்றோர் திணறல் முகாம் அமைக்க வலியுறுத்தல்
பிழை இருந்தால் எந்த துறைக்கு செல்வது? 'பந்தாடும்' அதிகாரிகளால் பெற்றோர் திணறல் முகாம் அமைக்க வலியுறுத்தல்
பிழை இருந்தால் எந்த துறைக்கு செல்வது? 'பந்தாடும்' அதிகாரிகளால் பெற்றோர் திணறல் முகாம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 11:26 PM
திருவாலங்காடு, பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் எந்த துறையிடம் செல்வது என தெரியாமல், குழந்தைகளின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு தலைமை மருத்துவமனை, 288 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
இங்கு தினமும், 350க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.
இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சுகாதாரத் துறை மற்றும் நகரங்களில் பிறந்தவர்களுக்கு நகராட்சி சார்பிலும், கிராமங்களில் பிறந்தவர்களுக்கு ஊராட்சி சார்பிலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது முதல், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, பான் கார்டு, பாஸ்போர்ட் என அனைத்துக்கும், ஆதார் கார்டு அவசியம். தற்போதைய சூழலில், பிறப்பு சான்றிதழ் பெற்றவர்களால் மட்டுமே ஆதார் கார்டு பெற முடியும்.
ஆனால், பெற்றோர் பலர், பிறப்பு சான்றிதழ் பெறும்போது, இனிஷியல், அவரவர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்வதில்லை.
குழந்தைகளுக்கு ஆதார் பதிவுக்கு செல்லும் போது, பெற்றோரின் ஆதார் விபரங்களுடன், பிறப்பு சான்றிதழ் ஒத்துப்போகாததால், மீண்டும் திருத்தம் செய்ய அலைமோதுகின்றனர்.
ஆதாரில் இனிஷியல் இருந்து, பிறப்பு சான்றிதழில் இல்லை என்றால், குழந்தைக்கு ஆதார் பதிவு செய்ய முடியாது. பிறப்பு சான்றிதழில் தந்தை, தாய் இருவரின் பெயருடன் இனிஷியல் சேர்த்து வருமாறு திருப்பி அனுப்புகின்றனர்.
இதனால், சுகாதார துறையிடம் திருத்தம் செய்ய சென்றால், உள்ளாட்சி நிர்வாகத்திடம் சென்று திருத்தம் செய்யுங்கள் என, திருப்பி அனுப்புவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால், எந்த துறையை அணுகுவது என தெரியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய இரண்டு துறையும் இணைந்து, ஒன்றியம் வாரியாக முகாம் நடத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிறப்பு சான்றிதழில் பெற்றோர் பெயருக்கு பின்னால் தந்தை பெயர் இருந்து, ஆதாரில் இல்லை என்றால் அதுவும் சிக்கல். எனவே, பிறப்பு சான்றிதழில், ஆதாரில் உள்ளபடியே பெற்றோர் பெயரை பதிவு செய்வது அவசியம். இல்லையெனில், ஐந்து ஆண்டுகள் கழித்து அலைய வேண்டியிருக்கும். உரிய ஆவணங்கள் இன்றி, பிறப்பு சான்றிதழில் அனைத்து விபரங்களையும் எளிதில் திருத்தம் செய்ய முடியாது. உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று முகாம் நடத்தப்படும்.
- சுகாதார துறை அதிகாரி,
திருவாலங்காடு.