/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் 'பம்பிங் ஸ்டேஷன்' பயன் தருமா?
/
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் 'பம்பிங் ஸ்டேஷன்' பயன் தருமா?
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் 'பம்பிங் ஸ்டேஷன்' பயன் தருமா?
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் 'பம்பிங் ஸ்டேஷன்' பயன் தருமா?
ADDED : ஆக 29, 2025 12:33 AM
பொன்னேரி, பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக, 'பம்பிங் ஸ்டேஷன்' கட்டும் பணி நடைபெறுகிறது. இது, முறையான திட்டமிடல் இன்றி அமைப்பதால், பயன் தருமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொன்னேரி - பழவேற்காடு சாலையில், திருவாயற்பாடி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மெதுார், பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, கோளூர் என, 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, பொன்னேரி வந்து செல்ல இந்த சுரங்கப்பாதை பிரதான வழித்தடமாக உள்ளது.
இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கிறது. மேலும், வாகனங்கள் பழுதாகி பாதி வழியில் நின்று விடுகின்றன. சிறுமழை பெய்தாலும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
அச்சமயங்களில், பொன்னேரி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், மோட்டார்கள் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.
தற்போது, சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றுவதற்காக, 'பம்பிங் ஸ்டேஷன்' கட்டும் பணி நடைபெறுகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இது மழைக்காலத்தில் பயன் தருமா எனவும், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர், அருகில் உள்ள பாலாஜி நகர் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரிக்கு மழைநீர் வருவதால், விரைவாக நிரம்பி விடுகிறது. அச்சமயத்தில், சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும்.
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை, ஏரிக்கு வெளியேற்ற நிரந்தர தீர்வாக, 'பம்பிங் ஸ்டேஷன்' அமைக்கப்படுகிறது. இது சரியான திட்டமிடல் இல்லை. சுரங்கப்பாதையின் மேற்கு பகுதியில், 100 மீ., தொலைவில் ஆரணி ஆறு செல்கிறது.
சுரங்கபாதையில் இருந்து குழாய் அமைத்து, தேங்கும் மழைநீரை ஆரணி ஆற்றில் வெளியேற்றலாம். இது, நிரந்தர தீர்வாக இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.