70 ஆண்டு பழமையான பொன்னேரி துணை மின்நிலையம் புத்துயிர் பெறுமா?காலாவதியான மின்சாதனங்களால் பயனாளர்கள் பரிதவிப்பு
70 ஆண்டு பழமையான பொன்னேரி துணை மின்நிலையம் புத்துயிர் பெறுமா?காலாவதியான மின்சாதனங்களால் பயனாளர்கள் பரிதவிப்பு
UPDATED : ஆக 09, 2026 09:39 PM
ADDED : ஆக 09, 2026 08:02 PM

பொன்னேரி:பொன்னேரி துணைமின் நிலையம் அமைந்து, 70 ஆண்டுகளான நிலையில், அங்குள்ள மின்சாதனங்கள் காலாவதியாகின. இதனால், மின்வெட்டு, மின் பற்றாக்குறையால், ஒரு லட்சம் பயனாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், 33 கிலோ வோல்ட் துணைமின் நிலையமானது, 1956ல் அமைக்கப்பட்டது. பொன்னேரி நகரம் மற்றும் அனுப்பம்பட்டு, திருவேங்கிடபுரம், பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், சின்னகாவணம், உப்பளம், எலவம்பேடு என, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த துணைமின் நிலையத்திற்கு, 11 கி.மீ.,யில் உள்ள மீஞ்சூர் அடுத்த மேலுார் மற்றும் 7 கி.மீ.,யில் உள்ள பஞ்செட்டியில் இருந்து, 33 கிலோ வோல்ட் மின்சாரம் கொண்டு வரப்பட்டு, மின்மாற்றிகள் உதவியுடன், 11 கிலோ வோல்ட்டாக மாற்றப்படுகிறது.
பின், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவன பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, தேவையான இடங்களில் சிறிய அளவிலான மின்மாற்றிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த துணைமின் நிலையத்தில் விவசாயம், வணிகம், குடியிருப்புகள், சிறு தொழில் நிறுவனங்கள் என, ஒரு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
சென்னையின் புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக பொன்னேரி இருப்பதால், நாளுக்கு நாள் இங்கு புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. புதிய மின் இணைப்புகளும் அதிகரித்து வருகின்றன.
பெருகி வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப துணைமின் நிலையம் தரம் உயர்த்தப்படாமல், 70 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட பிரேக்கர், ஐசுலேட்டர் உள்ளிட்ட பழைய மின் உபகரணங்களுடன் தற்போதும் செயல்படுகிறது.
மேலுார், பஞ்செட்டி பகுதிகளில் இருந்து மின்சாரம் கொண்டு வரப்படும் மின்கம்பிகள் மற்றும் கம்பங்கள் காலாவதியாகி, பராமரிப்பு இன்றி உள்ளன. சிறு மழை பெய்தாலும், மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன.
துணைமின் நிலையத்தில் உள்ள மின்மாற்றிகள், கண்ட்ரோலர்கள், பிரேக்கர், ஐசுலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின் உபகரணங்கள் காலாவதியான நிலையில் அவ்வப்போது பழுதாகின்றன. இதனால், மின் வினியோகம் அடிக்கடி பாதிக்கிறது.
மேலும், துணைமின் நிலையம் வளாகம், பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி, 2 அடி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் துணைமின் நிலைய வளாகம் முழுதும் குளம்போல் மழைநீர் தேங்கி, மோட்டார் உதவியுடன் வெளியேற்றும் நிலை உள்ளது.
மேலும், இங்குள்ள பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டடங்களும் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. அவற்றில் பணியாளர்கள் வசிக்கவில்லை. அதேசமயம், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனர். மேலும், இந்த வளாகத்தில் மின்விளக்கு வசதிகளின்றி, இரவு நேரங்களில் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.
பெருகி வரும் குடியிருப்புகளால், மின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப துணைமின் நிலையத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படாமல் இருப்பது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு நிலைகளில் பொன்னேரி துணைமின் நிலையம் காலாவதியான நிலையில், தரம் உயர்த்தி, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மின்வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, பொன்னேரி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொன்னேரி துணைமின் நிலையத்தை தரம் உயர்த்துவது குறித்து திட்டமிடப்பட்டு உள்ளது. மின் வினியோகம் பாதிப்பு இல்லாமல் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் துணைமின் நிலையம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தரம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய திட்டமிடல்கள் இல்லை துணைமின் நிலையம் அமையும்போது, 10,000த்திற்கும் குறைவான மின் இணைப்புகளே இருந்தன. தற்போது, 10 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. துருப்பிடித்து காலாவாதியான மின் உபகரணங்களை மின் ஊழியர்கள் எப்படி கையாண்டு, சீரான மின் வினியோகம் வழங்க முடியும். புதிய திட்டமிடல்கள் இன்றி துணைமின் நிலையம் செயல்படுகிறது. நவீன தொழில்நுட்ப மின் உபகரணங்களை கொண்டு துணைமின் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும். - ஏ.ஸ்ரீதர்பாபு சமூக ஆர்வலர், பொன்னேரி.
