/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்து நடந்தும் நெ.சா.துறை அலட்சியம் சாலையோரம் தடுப்பு அமைக்கப்படுமா?
/
விபத்து நடந்தும் நெ.சா.துறை அலட்சியம் சாலையோரம் தடுப்பு அமைக்கப்படுமா?
விபத்து நடந்தும் நெ.சா.துறை அலட்சியம் சாலையோரம் தடுப்பு அமைக்கப்படுமா?
விபத்து நடந்தும் நெ.சா.துறை அலட்சியம் சாலையோரம் தடுப்பு அமைக்கப்படுமா?
ADDED : நவ 24, 2025 04:14 AM

பொன்னேரி: மீஞ்சூர் - திருப்பாலைவனம் மாநில நெடுஞ்சாலையோரம் தடுப்புகள் இல்லாமல், அவ்வப்போது வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.
மீஞ்சூர் - திருப்பாலைவனம் மாநில நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, காட்டூர் ஏரியின் கரைகளை ஒட்டி அமைந்துள்ளது.
இங்கு, ஒருபுறம் ஏரியின் கரை, மறுபுறம் 20 அடி தாழ்வான பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன.
மேலும், ஆறு இடங்களில் சாலை வளைவுகள் உள்ளன. 2 கி.மீ.,க்கு தடுப்பு இல்லாமல் உள்ளது. சென்னையில் இருந்து பழவேற்காடு செல்வோர், பழவேற்காடில் இருந்து மீன், இறால் உள்ளிட்டவைகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள், இச்சாலை வழியாக பயணிக்கின்றனர்.
இந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஏராளமான வளைவுகள் மற்றும் சாலையோரம் தாழ்வாக இருப்பதால், வாகன ஓட்டிகள் காட்டூர் ஏரிப்பகுதியை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றனர்.
குறிப்பாக, திருப்பாலைவனத்தில் இருந்து மீஞ்சூர் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரத்தில் தாழ்வாக உள்ள பகுதியை கடக்கும்போது அச்சத்துடன் செல்கின்றனர். சாலையோரம் தடுப்பு மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாததால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த ஆக., 23ல், மீஞ்சூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, காட்டூர் ஏரிக்கரை சாலையோரத்தில் அந்தரத்தில் தொங்கியது.
பேருந்தில் பயணியர் குறைவாக இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், காட்டூர் ஏரிக்கரை பகுதி முழுதும், சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள், ஒளிரும் விளக்குகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

