/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் திருவள்ளூர் 'பைபாஸ்' சாலை புத்துயிர் கொடுப்பாரா புதிய கலெக்டர்
/
கிடப்பில் திருவள்ளூர் 'பைபாஸ்' சாலை புத்துயிர் கொடுப்பாரா புதிய கலெக்டர்
கிடப்பில் திருவள்ளூர் 'பைபாஸ்' சாலை புத்துயிர் கொடுப்பாரா புதிய கலெக்டர்
கிடப்பில் திருவள்ளூர் 'பைபாஸ்' சாலை புத்துயிர் கொடுப்பாரா புதிய கலெக்டர்
ADDED : பிப் 04, 2025 07:31 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட புறவழிச்சாலை திட்ட பணி, ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர், இத்திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை - திருப்பதி செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவள்ளூர். மாவட்ட தலைநகரான, திருவள்ளூரைச் சுற்றி, ஏராளமான தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், திருவள்ளூர் நகரம் வழியாக வந்து செல்கின்றன.
ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, செங்குன்றம், ஆவடி வழியாக வரும் வாகனங்கள், திருவள்ளூர் ஜே.என்.சாலை வழியாக செல்வதால், இச்சாலை எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
பெரியகுப்பத்தில் இருந்து, ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, கலெக்டர் அலுவலகம் வரை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், வங்கிகள், நீதிமன்றங்கள் உள்ளன.
இவற்றுக்கு வரும், நோயாளிகள், ஊழியர்கள், மாணவ - மாணவியர் என, பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இந்த நெரிசலை களைய, திருவள்ளூர் - - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், மணவாள நகர் அடுத்த, மேல்நல்லாத்துாரில் இருந்து, கூவம் ஆற்றை கடந்து, சேலை வழியாக, திருப்பாச்சூரை இணைக்கும் வகையில், 5.6 கி.மீ., நீளத்திற்கு புறவழிச் சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.
கடந்த 2019ல், அந்த சாலை திட்டப் பணிக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி, நிலம் கையகப்படுத்தி, திட்டத்தை நிறைவேற்ற, 86.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் பின், புறவழிச்சாலை பணி அமைக்கும் பணி துவங்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையடையாமல் இருந்ததால், திருவள்ளூர் நகரில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது:
திருவள்ளூர் புறவழிச் சாலைத் திட்டப் பணிக்காக, மேல்நல்லாத்துார், பெரியகுப்பம், சேலை மற்றும் திருப்பாச்சூர் வரை, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பயனாளிகளுக்கு இழப்பீடு தொகை, படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீட்டு தொகை முழுதும் கொடுத்தால்தான், நிலம் கையகப்படுத்தி, சாலை பணி துவங்க முடியும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் பிரதாப், இழப்பீட்டு தொகை வழங்கும் பணியை விரைவுபடுத்தி, புறவழிச்சாலை திட்டத்தினை துவக்கி, திருவள்ளூர் நகர நெரிசலுக்கு விடிவு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.