/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்தில் மாணவர்கள் 'சாகச' பயணம் போலீசார் நடவடிக்கை எடுப்பரா?
/
பேருந்தில் மாணவர்கள் 'சாகச' பயணம் போலீசார் நடவடிக்கை எடுப்பரா?
பேருந்தில் மாணவர்கள் 'சாகச' பயணம் போலீசார் நடவடிக்கை எடுப்பரா?
பேருந்தில் மாணவர்கள் 'சாகச' பயணம் போலீசார் நடவடிக்கை எடுப்பரா?
ADDED : செப் 20, 2025 02:35 AM

திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கு அகூர், கோரமங்கலம், தாடூர், செருக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், தினமும் அரசு பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர்.
திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து வீரமங்கலம் நோக்கி, தடம் எண்: 65 என்ற அரசு பேருந்து சென்றது.
இதில், மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்தனர். அப்போது, மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டில் தொங்கி கொண்டும், கால்களை தரையில் உரசிய படியும், கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த படியும் சென்றனர்.
திருத்தணி போக்குவரத்து பணிமனை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலனுக்காக, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்துகளில் போதுமான இடமிருந்தும், மாணவர்கள் சிலர் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். நடத்துனர், ஓட்டுனர் பலமுறை எச்சரித்தும், மாணவர்கள் கண்டுகொள்வதில்லை.
எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன், பேருந்து படிகளில் தொங்கியப்படி ஆபத்தாக பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.
பொதட்டூர்பேட்டை பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டையில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே பகுதியில் தனியார் கல்லுாரிகளும் அமைந்துள்ளன.
இந்த மார்க்கமாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த மாணவர்கள், பேருந்தின் படிகள் மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி பயணிக்கின்றனர். இந்த மாணவர்களால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், படியில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி தான்.
பேருந்துகளில் அட்டகாசம் செய்யும் மாணவர்களை கட்டுப்படுத்தும் வகையில், அத்திமாஞ்சேரிபேட்டை புறக்காவல் நிலையத்தில் போலீசார் முழுவீச்சில் பணியில் ஈடுபட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நமது நிருபர் -