/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் பதிவின்றி இயங்கும் கழிவுநீர் லாரிகளுக்கு... கடிவாளம் எப்போது?:கலெக்டர் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
திருவள்ளூரில் பதிவின்றி இயங்கும் கழிவுநீர் லாரிகளுக்கு... கடிவாளம் எப்போது?:கலெக்டர் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருவள்ளூரில் பதிவின்றி இயங்கும் கழிவுநீர் லாரிகளுக்கு... கடிவாளம் எப்போது?:கலெக்டர் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருவள்ளூரில் பதிவின்றி இயங்கும் கழிவுநீர் லாரிகளுக்கு... கடிவாளம் எப்போது?:கலெக்டர் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
UPDATED : ஏப் 10, 2025 02:59 AM
ADDED : ஏப் 09, 2025 10:46 PM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் கழிவுநீர் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்து மூன்றாண்டுகளாகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அனுமதியில்லாமல் இயங்கும் கழிவுநீர் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் கழிவுநீர் லாரிகள் முறையான அனுமதி பெறாமல் இயங்குவதாக, கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து, 2022 ஆகஸ்ட் மாதம், அப்போதைய கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில், துாய்மை பாரத இயக்கத்தின் கீழ், ஊரக, நகர்ப்புற அதிகாரிகள் மற்றும் கழிவுநீர் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:
கழிவுநீர் லாரிகள் சம்பந்தப்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற அதிகாரிகளிடம் பதிவு செய்து, முறையான அனுமதி பெற வேண்டும். ஒரு கழிவுநீர் லாரிக்கு நகர்ப்புற பகுதிகளில் 5,000 ரூபாய் வீதமும், ஊரக பகுதிகளில் 3,000 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
பின், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அனுமதியின்றி இயங்கும் கழிவுநீர் வாகனங்களை ஆய்வு செய்து, காவல் துறையினர் வாயிலாக பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட நகர்ப்புற, ஊரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். வேறு பகுதிக்கு சென்றால், வாகனங்கள் பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சம்பந்தப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினமும் அறிக்கை பெறவும், பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றும் வாகனங்களை கண்காணிக்க வேண்டுமெனவும், நகர்ப்புற மற்றும் ஊரக அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆனால், தற்போது வரை அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் அனுமதியின்றி கழிவுநீர் லாரிகள் இயங்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும், கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லாமல், நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் திறந்து விடுவதும் தொடர்கிறது.
இவ்வாறு நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனுமதியின்றி மற்றும் கழிவுநீரை இஷ்டம் போல் வெளியேற்றும் கழிவுநீர் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் லாரிகள் இயங்குவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி பகுதிகளில் இயங்கும் கழிவுநீர் லாரிகள் குறித்து தகவல் கேட்டுள்ளோம். தகவல் வந்தவுடன் கழிவுநீர் லாரிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரக வளர்ச்சி துறை அதிகாரி,
திருவள்ளூர்.

