/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தம் பணி தீவிரம்
/
ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தம் பணி தீவிரம்
UPDATED : ஆக 02, 2025 11:45 PM
ADDED : ஆக 02, 2025 11:40 PM

பொன்னேரி:வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 11 கி.மீ., தொலைவிற்கு ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணியில் நீர்வளத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
![]() |
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நாராயணவனம் பகுதியில் உள்ள சதாசிவகொண்டா மலைப்பகுதியில் உருவாகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூரில் துவங்குகிறது.
தமிழகத்தின், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, ஆரணி, பொன்னேரி, தத்தமஞ்சி ஆகிய கிராமங்கள் வழியாக, 127 கி.மீ., பயணிக்கிறது. பின், பழவேற்காடு வழியாக, வங்காள விரிகுடா கடலில் முடிவடைகிறது.
வெள்ளப்பெருக்கு காலங்களில், ஆரணி ஆற்றின் கரைகள் உடைந்து, அருகே உள்ள கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துவிடும். இதை தவிர்க்க, பலவீனமாக உள்ள கரைகளை கண்டறிந்து, அவற்றை பலப்படுத்தும் பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இதுவரை ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, சோமஞ்சேரி, ஆண்டார்மடம் ஆகிய கிராமங்களில், கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் அமைத்து, கரைகள் பலப்படுத்தப்பட்டன.
நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக, ஆற்றின் கரைகளை பலப்படுத்துவதற்காக, 8.50 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது.
அந்த நிதியில், தற்போது குண்ணம்மஞ்சேரி, ஏலியம்பேடு, லட்சுமிபுரம், கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம் ஆகிய கிராமங்களில், 11 கி.மீ.,க்கு கரைகள் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு பகுதியிலும், ஏற்கனவே இருக்கும் கரையின் உயரத்தில் இருந்து, கூடுதலாக, 2 - 3 அடி உயரம், 4 மீ., அகலத்தில் அமைக்கப்படுகின்றன.
இதற்காக, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், ஆற்றின் உள்பகுதியில் இருந்து மண் அள்ளி கரைகள் பலப்படுத்தப்படுகிறது. 'வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகள் முடிக்கப்படும்' என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.