/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாட்டு வெடிகுண்டு வீச்சு வாலிபர் படுகாயம்
/
நாட்டு வெடிகுண்டு வீச்சு வாலிபர் படுகாயம்
ADDED : ஆக 20, 2025 02:24 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் சிற்றம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேது, 26. இவர், நேற்று மாலை 6:00 மணிக்கு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, 'மாருதி ஸ்வீப்ட்' காரில் வந்த மர்ம நபர்கள், நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், சேதுவின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது:
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி, பேரம்பாக்கம் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட பிரச்னையில், சேது மற்றும் முகேஷ் தரப்பினர் மோதிக் கொண்டனர். சேது தரப்பினர், களாம்பாக்கத்தில் வசிக்கும் முகேஷ் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரையும் வெட்டினர்.
இதில், இருவரும் படுகாயமடைந்தனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த சம்பவம் நடந்து இருக்கலாம்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழரசி, கடம்பத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.