/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நீதிமன்ற உத்தரவை மீறி தாமிர கழிவு அகற்றம்: லட்சங்களை அள்ளும் ஆளுங்கட்சி புள்ளிகள்
/
நீதிமன்ற உத்தரவை மீறி தாமிர கழிவு அகற்றம்: லட்சங்களை அள்ளும் ஆளுங்கட்சி புள்ளிகள்
நீதிமன்ற உத்தரவை மீறி தாமிர கழிவு அகற்றம்: லட்சங்களை அள்ளும் ஆளுங்கட்சி புள்ளிகள்
நீதிமன்ற உத்தரவை மீறி தாமிர கழிவு அகற்றம்: லட்சங்களை அள்ளும் ஆளுங்கட்சி புள்ளிகள்
ADDED : மே 24, 2024 03:53 AM

துாத்துக்குடி: துாத்துக்குடியில், 2018ல் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக, அந்த ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டபோது அதில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமிர கழிவுகள், மாவட்டத்தின் பல பகுதிகளில் கொட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, துாத்துக்குடி குமாரகிரியில், புதுக்கோட்டை பாலத்தின் அருகே உப்பாற்று ஓடை பகுதியில், பட்டா நிலங்களில் தாமிர கழிவுகள் கொட்டப்பட்டன. 2015ல் வெள்ளம் ஏற்பட்டபோது அந்த கழிவுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, தாமிர கழிவுகள் கொட்டப்பட்ட பட்டா இடத்தை சுற்றி சுவர் அமைக்கப்பட்டது.
மேலும், அந்த இடத்தில் உள்ள தாமிர கழிவுகள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கழிவுகளை அகற்றக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால், தற்போது, அந்த தனியார் பட்டா நிலத்தில் இருந்து சட்ட விரோதமாக ஸ்டெர்லைட் தாமிர கழிவு மண் கடத்தப்பட்டு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த, நீதிமன்ற விதிமுறை மீறலில் ஆளுங்கட்சியான தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர் என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் காந்திமதிநாதன் கூறியதாவது:
தனியார் பட்டா நிலத்தில் உள்ள தாமிர கழிவு மண்ணை அகற்ற நீதிமன்ற தடை உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முகாந்திரம் உள்ளதை சுட்டி காட்டி கலெக்டர், சப் - கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகவே சட்ட விரோதமாக ஸ்டெர்லைட் தாமிர கழிவு மண் அள்ளப்படுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய செயலர் தலைமையில் நிர்வாகிகள் சிலர், இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.
இதன் வாயிலாக, தினமும் பல லட்சம் ரூபாயை சம்பாதிக்கின்றனர். இந்த புகார் தொடர்பாக இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதை தடுக்க தவறிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, பல அமைப்புகளுடன் இணைந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள மஹாத்மா காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.