/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரூ.40 லட்சம் பீடி இலை லாரியுடன் பறிமுதல்
/
ரூ.40 லட்சம் பீடி இலை லாரியுடன் பறிமுதல்
ADDED : ஜூலை 06, 2024 02:38 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து, இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆலந்தரை கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் இருந்து, 40 மீட்டர் தொலைவில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்ய முயன்றனர். லாரியில் இருந்த டிரைவர் தப்பியோடி விட்டார். லாரியில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், 87 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில், தலா 35 கிலோ எடை கொண்ட, 3 டன் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. இலங்கைக்கு கடத்துவதற்காக இந்த பீடி இலைகள் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பீடி இலை பண்டல்கள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு, 40 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.