/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி திருவிழா கோலாகலம்
/
திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி திருவிழா கோலாகலம்
திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி திருவிழா கோலாகலம்
திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி திருவிழா கோலாகலம்
ADDED : மார் 13, 2025 03:15 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான, 10ம் நாள் திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.
காலை 7:03 மணிக்கு விநாயகர் வீற்றிருந்த தேர் புறப்பட்டு ரதவீதி சுற்றி 7:45 மணிக்கு நிலைக்கு வந்தது.
சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் காலை 7:50 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றிய தேர், முற்பகல் 11:00 மணிக்கு நிலை சேர்ந்தது. தொடர்ந்து தெய்வானை அம்பாள் வீற்றிருந்த தேர் 11:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:35 மணிக்கு நிலை சேர்ந்தது.
தேரோட்டத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி., மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 11ம் நாள் திருவிழாவான இன்று இரவு சுவாமி, அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்ஸவம் நடக்கிறது.
நாளை, 12ம் நாள் திருவிழாவில் மாலை 4:30 மணிக்கு சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேரும் நிகழ்ச்சி நடக்கிறது.