/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆத்துார் வெற்றிலை உற்பத்தி சரிவு மாற்று பயிருக்கு மாறிய விவசாயிகள்
/
ஆத்துார் வெற்றிலை உற்பத்தி சரிவு மாற்று பயிருக்கு மாறிய விவசாயிகள்
ஆத்துார் வெற்றிலை உற்பத்தி சரிவு மாற்று பயிருக்கு மாறிய விவசாயிகள்
ஆத்துார் வெற்றிலை உற்பத்தி சரிவு மாற்று பயிருக்கு மாறிய விவசாயிகள்
ADDED : செப் 28, 2025 03:26 AM

துாத்துக்குடி:புவிசார் குறியீடு பெற்ற ஆத்துார் வெற்றிலை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, விவசாயிகள் மாற்று பயிர்களை பயிரிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள துாத்துக்குடி மாவட்டம், ஆத்துார் பகுதியில் மூன்று தலைமுறைகளாக வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. ஆத்துார் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளான ராஜபதி, வாழவல்லான், மாரந்தலை, கொற்கை போன்ற கிராமங்களில் வெற்றிலை விவசாயத்தை நம்பி, 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
தாமிரபரணி ஆற்று தண்ணீர், மண், காற்றின் ஈரப்பதம் போன்றவற்றால் ஆத்துார் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் வெற்றிலை உலகப் புகழ் பெற்றது. காரத்தன்மை, மருத்துவ குணம் கொண்ட ஆத்துார் வெற்றிலைக்கு கடந்த ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது.
இருப்பினும், 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின் வெற்றிலை பயிரிடப்படும் அளவு குறைந்துள்ளது. நோய் தாக்குதல், காலநிலை மாற்றத்தால் சில ஆண்டுகளாகவே வெற்றிலை உற்பத்தி குறைந்து வருவதால், மாற்று பயிர்களை பயிரிட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆத்துார் சுற்று வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், ''தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பகுதிகளில் சக்கை, மாத்து, ராசி, சன்னம் போன்ற வெற்றிலை ரகங்கள் பயிர் செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில், 1000 ஏக்கரில் நடந்து வந்த வெற்றிலை விவசாயம் தற்போது, 300 ஏக்கர் என்ற அளவில் மட்டுமே நடந்து வருகிறது.
''கால நிலை மாற்றத்தால் அதிக மழை, மழையின்மை, வெயில், பனி போன்றவை காரணமாக வெற்றிலை கொடியை இலைப்புள்ளி, கருங்குடி, சுருட்டை நோய், இலைசுருட்டல், தண்டு அழுகுதல், வேர் அழுகுதல் போன்ற நோய்கள் தாக்குகின்றன. இதனால், வெற்றிலை உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
''இதனால் போதிய வருமானமின்றி பெருத்த நஷ்டத்தையே சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றிலைக்கு பதிலாக வாழையும், ஊடுபயிராக முருங்கையும் பயிரிட்டு வருகிறோம்,'' என்றார்.