/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
எஸ்.பி.,யிடம் புகாரளிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ்., கைது
/
எஸ்.பி.,யிடம் புகாரளிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ்., கைது
ADDED : செப் 19, 2024 01:59 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்த பெண் ஒருவர், பண மோசடி தொடர்பாக எஸ்.பி.,யிடம் நேரடியாக புகார் அளிக்க வேண்டும் என கூறினார்.
இதையடுத்து, எஸ்.பி., ஆல்பர்ட் ஜானை நேரடியாக சந்தித்து பேசிய அவர், தன்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
உ.பி.,யில் கல்விதுறையில் உதவி செயலராக இருப்பதாக கூறிய அவர், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர், தன்னிடம் பணத்தை வாங்கி திருப்பி தராமல், ஏமாற்றி வருவதாக கூறினார்.
அந்த பெண்ணின் மீது சந்தேகமடைந்த எஸ்.பி., அவரிடம் சில கேள்வியை எழுப்பியபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வாயிலாக விசாரணை நடத்த எஸ்.பி., உத்தரவிட்டார்.
விசாரணையில், அந்த பெண், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மங்கையர்கரசி, 44, என்பது தெரிந்தது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்ததாக, அவர் மீது, சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவருடன் வந்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத், 42, மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருவரையும் கைது செய்த போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.