/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மாணவர்களை அடித்ததாக பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
/
மாணவர்களை அடித்ததாக பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 20, 2024 02:01 AM

எட்டயபுரம்:துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மேலநம்பியபுரம் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 45 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்; மூன்று ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், விடுமுறை நாளில் குளத்தில்குளிக்க சென்ற ஏழு மாணவர்களை, ஆசிரியர் ராதாகிருஷ்ணன், 51, அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், மாணவர்கள் உடலில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி, ஏழு மாணவர்களின் பெற்றோர், பள்ளி முன் நேற்று திரண்டனர். மாணவர்களை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று, மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ஆசிரியர் ராதாகிருஷ்ணனை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நாயகம் உத்தரவு பிறப்பித்தார்.
பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் ராதிகா கூறியதாவது:
மாணவர்கள் ஏழு பேரும் பெற்றோருடன் தான் குளிக்கச் சென்றனர். என் மகன் உட்பட ஏழு பேரையும் ஆசிரியர் கடுமையாகக் தாக்கியுள்ளார். அவர்கள் சரியாக படிக்கவில்லை என்று செருப்பாலும் அடித்துள்ளார்.
ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.