/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சூரனை வதம் செய்தார் முருகன்!: திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்
/
சூரனை வதம் செய்தார் முருகன்!: திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்
சூரனை வதம் செய்தார் முருகன்!: திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்
சூரனை வதம் செய்தார் முருகன்!: திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்
ADDED : நவ 07, 2024 05:24 PM

தூத்துக்குடி: அநீதியை அழித்து நீதியை நிலை நாட்டும் விதமாக சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, திருச்செந்தூரில் நடந்தது. ஏராளமான பக்தர்கள்,அரோகரா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சஷ்டி விழா நவ. 2ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நவ., 7 மாலை 4:30 மணியளவில் திருச்செந்துார் கோயில் முன்புள்ள கடற்கரையில் நடக்கிறது. அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது. மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடந்தது. முதலில், கஜமுகத்துடன் சூரபத்மன் தோன்றினான். அவன் ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி, ஜெயந்திநாதரை சுற்றி வந்தவுடன், வதம் செய்து தலையை கொய்தார். மீண்டும், சிங்கமுகத்துடன் வந்த சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின், சூரபத்மன் நேரிடையாக தோன்றினான். அவனை வதம் செய்தார். சூரனை அழித்து தனது வாகனங்களான சேவலாகவும், மயிலாகவும் ஏற்றுக்கொண்டார். கடற்கரையில், இந்நிகழ்ச்சியை காண பக்தர்கள், 'கந்தனுக்கு அரோகரா, 'கந்தவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். கடல் அலைகளை மிஞ்சும் விதமாக, கடற்கரை முழுதும் பக்தர்கள் திரண்டனர்.
சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 4500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.