/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வு
/
தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வு
ADDED : செப் 09, 2011 12:46 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சிக்கு நான்காவது பைப்பு லைன் திட்டத்திற்கு குடிநீர் எங்கிருந்து கொண்டு செல்லலாம் என்பது குறித்து மூன்று இடங்களை நேற்று கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆய்வு செய்தார்.
இதில் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தகுதியான ஒரு இடம் தேர்வு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் போக்கும் வகையில் நான்காம் பைப்பு லைன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெ..தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் முதல்வர் தீவிரம் காட்டி வருகிறார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு நான்காம் பைப் லைன் திட்டத்தை செயல்படுத்த துரித நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளது. இதன்படி நேற்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக மருதூர் மேலக்கால் அணைக்கட்டு பகுதியிலும், கருங்குளம் பகுதியில் தாமிரபரணி ஆற்று படுகையிலும், தாமிரபரணி ஆறு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியிலும் கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆய்வு செய்தார். ஒவ்வொரு இடத்திலும் அணையின் கொள்ளளவு எவ்வளவு, எவ்வளவு தண்ணீரை குடிநீருக்காக கொண்டு செல்ல முடியும், மழைக்காலங்களில் எவ்வளவு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது, மழை இல்லாத காலங்களில் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம் என்பது குறித்து வேளாண் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் இது குறித்து கூறியதாவது; தூத்துக்குடி நான்காவது பைப்லைன் திட்டத்திற்காக மருதூர் மேலக்கால் அணைக்கட்டு பகுதியிலும், கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்படுகையிலும், தாமிபரரணி ஆறு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று இடங்களில் எந்த இடம் தகுதியாக இருக்கும் என்று தேர்வு செய்து, யாருக்கும் பாதிப்பும் இல்லாத வகையில் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவக்கப்பட்டு நான்காவது பைப்லைன் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வன அலுவலர் நிகார் ரஞ்சன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்காதரன், உதவி பொறியாளர் ரகுநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனசிங்டேவிட், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா, பி.ஆர்.ஓ சுரேஷ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.