/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசியல் பேச வாய்ப்பூட்டு
/
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசியல் பேச வாய்ப்பூட்டு
ADDED : மார் 25, 2024 01:25 AM
திருப்பூர்;'பணி நேரத்தில் தங்களுக்குள் அரசியல் தொடர்பான விஷயங்களை விவாதிப்பதோ, பேசுவதோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்,' என, 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் டெக்னீசியன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
''மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் வெளிநபர்களை, 108 ஆம்புலன்ஸில் ஏற அனுமதிக்கக்கூடாது. தேர்தல் அலுவலர்கள் வாகனத்தை சோதனை செய்ய வந்தால் அனுமதிக்க வேண்டும். அதே நேரம், போலீசார் அல்லாத தனிநபர், கட்சியினர் சோதனை செய்ய முற்பட்டால் அனுமதிக்கக்கூடாது.
நோயாளி, அவருடன் வருபவர் ஆம்புலன்ஸில் உள்ள வைப்பு அறை, உபகரண பெட்டிகளை திறக்காமல், எந்த பொருட்களையும் அதில் வைக்க, அனுமதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல், பிரசாரம் தொடர்பான அல்லது விளம்பரத்துக்கு உள்ள பொருட்களை வைத்திருந்தால் அவற்றை தவிர்த்து ஊர்தியில் நோயாளியை ஏற்ற வேண்டும். ஒத்துழைக்க மறுத்து, இடையூறு செய்தால் போலீசார் உதவியை நாட வேண்டும்.
''பணி நேரத்தில் அரசியல், தேர்தல் தொடர்பான விஷயங்களை பற்றி விவாதிப்பதோ, கருத்துகளைக் கூறுவதோ கண்டிப்பாக கூடாது; எந்த ஒரு கட்சிக்கும் சாதகமாக, பாதகமாக தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது,' என்பன உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவுகளை பின்பற்றாமல் விதிமீறினால், ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகல், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

