/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனிக்கும் இயற்கை விருட்சமான 22 லட்சம் மரக்கன்றுகள்; 10 ஆண்டுகளில் அளப்பரிய சாதனை
/
இனிக்கும் இயற்கை விருட்சமான 22 லட்சம் மரக்கன்றுகள்; 10 ஆண்டுகளில் அளப்பரிய சாதனை
இனிக்கும் இயற்கை விருட்சமான 22 லட்சம் மரக்கன்றுகள்; 10 ஆண்டுகளில் அளப்பரிய சாதனை
இனிக்கும் இயற்கை விருட்சமான 22 லட்சம் மரக்கன்றுகள்; 10 ஆண்டுகளில் அளப்பரிய சாதனை
ADDED : மார் 01, 2025 06:26 AM
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம் கடந்த பத்தாண்டுகளில், திருப்பூர் மாவட்டத்தில், நடவு செய்யப்பட்டுள்ள 22 லட்சம் மரக்கன்றுகள் விருட்சமாக மாறி, பசுமைச்சூழலை உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் பத்தாம் ஆண்டு விழாவும், 11ம் ஆண்டு நாற்றுப்பண்ணை துவக்க விழாவும் இன்று நடக்கிறது.
'வெற்றி' அறக்கட்டளை, 2015 முதல், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம், திருப்பூரில் மரக்கன்றுகளை நட்டு, நேர்த்தியாக பராமரித்து வளர்க்க வழிகாட்டி ஊக்குவிக்கிறது. திருப்பூரில் 'வனப்பரப்பு இருக்கிறது' என்பதை மாற்றி, 'வனத்துக்குள் திருப்பூர்' இருக்க வேண்டும் என்ற இலக்குடன், பசுமைப்படை சுழன்று பணியாற்றி வருகிறது. இதுவரை, மாவட்டத்தில், கடந்த பத்தாண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இன்று பசுமை விழா
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் 10ம் ஆண்டு விழாவும், 11ம் ஆண்டு திட்டத்துக்கான நாற்றுப்பண்ணை துவக்க விழாவும், திருமுருகன்பூண்டி அடுத்த பழங்கரை ஐ.கே.எப்., வளாகத்தில் இன்று காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கு, 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு முன்னிலை வகிக்கிறார். 'வீ த லீடர்ஸ் பவுண்டேஷன்' முதன்மை சேவகரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான, அண்ணாமலை, 'சூழலியல் மாற்றத்தில் தொழில்முனைவோர் பங்கு' என்ற தலைப்பில் பேசுகிறார்.
'இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களா... பொறுப்பில் இருப்பவர்களா? ' என்ற தலைப்பில், பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
பண்டைய தமிழ் இலக்கியங்களில், ஐவகை நிலங்கள் குறிஞ்சி (மலை, மலை சார்ந்த இடம்); முல்லை (காடு, காடு சார்ந்த இடம்); மருதம் (வயல், வயல் சார்ந்த இடம்); நெய்தல் (கடல், கடல் சார்ந்த இடம்), பாலை (வறண்ட பகுதி) குறிப்பிடப்பட்டுள்ளன. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், எப்படிப்பட்ட நிலங்களாக இருந்தாலும், அதற்கேற்ற வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டு, தற்போது அவை விருட்சமாக உருவாக்கப்பட்டுள்ளன.
குறிஞ்சி
'மலை உடுமலை' திட்டக்குழுவுடன் கரம் கோர்த்து, உடுமலை சுற்றுப்பகுதிகளில், மலையும், மலை சார்ந்த பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. திருமூர்த்தி மலை பகுதியில், 'மரகத பூஞ்சோலை' என்ற பெயரில், மண்ணின் மரபுசார்ந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன; மலை அடிவாரத்தில் உள்ள, 'சைனிக்' பள்ளி வளாகம் மற்றும் திருமூர்த்தி அணையின் மேடான பகுதிகளில், கருமருது, கருங்காலி, திருவோடு, தான்றிக்காய், புத்திரன் ஜீவா, மருதமரம். ருத்ராட்சம், பன்னீர்மரம் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
முல்லை
மலை அடிவாரத்தில் உள்ள, காடு போன்ற பகுதிகளிலும், வனத்துறை உதவியுடன், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. இச்சி, அத்தி, மரமல்லி, உதியன், கருக்குவாச்சி, வன்னி போன்ற மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.
மருதம்
சொட்டுநீர் பாசன வசதியுடன், மலைவேம்பு, நாட்டுவேம்பு, புங்கன், தேக்கு, நாட்டுவாகை, இலுப்பை, நீர்மருது, செம்மரம், சந்தனம், மற்றும் கொய்யா, எலுமிச்சை, பலா, பாக்கு, கொன்னை போன்ற மரங்களை விவசாயிகள் இத்திட்டம் மூலம் வளர்க்கின்றனர்.
நெய்தல்
கடல் போல் காட்சியளிக்கும் திருமூர்த்தி, அமராவதி, உப்பாறு, நல்லதங்காள் ஓடை, வட்டமலைக்கரை ஓடை ஆகிய அணைக்கட்டுகள் அதிகம் உள்ளன. அணையின், நீர் தேங்காத நிலங்களில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் லட்சக்கணக்கான மரம் வளர்க்கப்பட்டு, காடு போல் மாற்றப்பட்டுள்ளன. வறட்சியை தாங்கி வளரும், நாட்டு வேம்பு, புளி, இலுப்பை, மூங்கில், துாங்குவாகை, காயா, வேங்கை போன்ற மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.
பாலை
திருப்பூரில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு, நொய்யல் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது; சின்னமுத்துார் அணையில் இருந்து பாசனம் மீண்டும் துவங்கியிருப்பதே அதற்கு சாட்சி.
'பாலை' என்ற அடையாளமாக இருந்த ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில், 1000 ஏக்கரில், மரம் வளர்த்து, வனம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 100 ஏக்கரை சுத்தம் செய்து, மருதமரம், ஆச்சா, பூந்திக்கொட்டை, நாகலிங்கம், பராய், ஈட்டி, கடம்பு, வேங்கை உள்ளிட்ட அரியவகை மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி துவங்கியிருக்கிறது.