/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2409 ஓட்டு மெஷின்கள் பெங்களூரு பயணம்
/
2409 ஓட்டு மெஷின்கள் பெங்களூரு பயணம்
ADDED : ஆக 23, 2024 10:23 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்திய 'எம் - 2' ரக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மற்றும் திருப்பர் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த, 2009க்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த மெஷின்கள், 15 ஆண்டுகளை கடந்து விட்டதால், 2,409 இயந்திரங்கள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஞ்சப்பா பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஸ்ட்ராங் ரூம்கள் நேற்று திறக்கப்பட்டு, காலாவதியான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டன.
அவற்றை, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்; அங்கு கொண்டுசெல்லப்பட்டு, இவை அழிக்கப்படும்.
நாடு முழுவதும் கடந்த ஏப்., துவங்கி ஜூன் வரை, ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், தேர்தலின் போது ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டன.
13 கன்ட்ரோல் யூனிட், 7 பேலட் யூனிட், 26 விவி.பேட்., என, 46 இயந்திரங்கள், மாவட்ட ஸ்ட்ராங் ரூமிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, பழுது நீக்கத்துக்காக, 'பெல்' நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் கிறிஸ்துராஜ், ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து, உறுதிப்படுத்தினார்.