/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளம் பரப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் விவசாயிகளுக்கு விதை, இடு பொருட்கள் வழங்கல்
/
மக்காச்சோளம் பரப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் விவசாயிகளுக்கு விதை, இடு பொருட்கள் வழங்கல்
மக்காச்சோளம் பரப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் விவசாயிகளுக்கு விதை, இடு பொருட்கள் வழங்கல்
மக்காச்சோளம் பரப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் விவசாயிகளுக்கு விதை, இடு பொருட்கள் வழங்கல்
ADDED : ஆக 27, 2024 02:08 AM
உடுமலை:மடத்துக்குளம் வட்டாரத்தில், மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு திட்டத்தின் கீழ், விதை, இடு பொருட்கள் வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில், ஆண்டு தோறும், காரிப் மற்றும் ராபி பருவத்தில், 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு பருவத்தில் மக்காச்சோள விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் துறை, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் சாகுபடி சிறப்பு திட்டம் செயல் விளக்கத்திடல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதை, 10 கிலோ, அசோஸ்பைரில்லம், பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள், ஆர்கானிக் உரங்கள் மற்றும் நானோ யூரியா கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன் சிறப்பு, மக்காச்சோள படைப்புழு எதிர்ப்பு திறன் அதிகம் கொண்டதாகவும், சாம்பல் நோய், அழுகல் நோய் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு திறன் கொண்டதாகும்.
அசோஸ்பைரில்லம், விதைக்கு மிகவும் உகந்த உயிரி உரமாகும். தழைச்சத்து மிக்க நுண்ணுயிர்கள் கொண்ட இந்த திரவமானது, மண் கிரகிக்காத கனிமங்களை, தாவரங்களுக்கு கிரகித்துக் கொடுத்து பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பாஸ்போ பாக்டீரியா, மண்ணில் உள்ள பாஸ்பரஸ் சத்தை தாவரங்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது. பயிர்களில் உயர் விளைச்சல் பெற பாஸ்போ பாக்டீரியாவை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும்.
இத்தொகுப்பில் வழங்கப்படும், ஆர்கானிக் உரங்கள், மக்காச்சோள சாகுபடியில், அதிகப்படியான ரசாயன உர பயன்பாடுகளை குறைத்து, ஆர்கானிக் உரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் வளத்தை பாதுகாக்க முடியும்.
மண்ணில் சத்தை அதிகப்படுத்தி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க இந்த ஆர்கானிக் உரங்கள் பயன்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நானோ யூரியா வழங்கப்படுகிறது. இது, நானோ தொழில்நுட்பத்தின் வாயிலாக தயாரிக்கப்பட்ட திரவ நிலை உரமாகும்.
இந்த உரங்கள், மண்ணுக்கு தீங்கு விளைவிக்காது. பயிர்களுக்கு தேவையான தழைச்சத்துக்களை இலை வழி தெளிப்பதன் வாயிலாக, அதிக மகசூல் கிடைக்கிறது.
இவ்வாறு, சிறப்பு திட்டத்தின் கீழ் வழக்கப்படும் இடு பொருட்கள், மடத்துக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் குமரலிங்கம் துணை வேளாண் விரிவாக்க நிலையத்திலும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ், விதை, இடு பொருட்கள் வாங்கி, மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல், லாபம் பெறலாம்.
இவ்வாறு, கூறினார்.