/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறக்கும் படை வாகனத்தில் இயங்கும் 'சோலார்' கேமரா
/
பறக்கும் படை வாகனத்தில் இயங்கும் 'சோலார்' கேமரா
ADDED : மார் 22, 2024 01:25 AM

திருப்பூர்;கோடை வெயில் அதிகரிப்பால், திருப்பூர் மாவட்ட பறக்கும்படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் கேமராக்கள் திறம்பட இயங்கி வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில், சட்டசபை தொகுதிக்கு மூன்று விதம், 24 பறக்கும்படை; 24 நிலை கண்காணிப்பு குழுக்கள், நாளொன்றுக்கு மூன்று ஷிப்ட் வீதம் இயங்குகின்றன.
மக்கள் அளிக்கும் புகாரின் பேரிலும், பிரதான பகுதிகளில் வாகன சோதனை நடத்தியும், ஆவணமின்றி கொண்டுசெல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை, தேர்தல் கண்காணிப்புக்புக்குழுவினர் பறிமுதல் செய்கின்றனர்.
தகவல் கிடைத்த அடுத்த நிமிடத்திலேயே விரைந்து செல்ல ஏதுவாக, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்களுக்கு, வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பறக்கும்படை வாகனங்களின் மேற்பகுதியில், சோலார் பேனலுடன் கூடிய சுழல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமரா, 360 டிகிரியில் கழுகுப்பார்வையில் சுழன்று, பறக்கும்படை வாகன சுற்றுப்பகுதியை படம் பிடிக்கிறது. கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடியே, கேமராவை தேவையான கோணத்தில் சுழலச்செய்து, குறிப்பிட்ட வாகனத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, நேரலையில் கண்காணித்துவருகின்றனர், கட்டுப்பாட்டு அதிகாரிகள்.
சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால், கேமராவை அனைத்து கோணங்களிலும் சுழற்றி, குற்ற சம்பவத்தில் ஈடுபடுவோரை துல்லியமாக படம்பிடித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்துவிட முடியும்.
கோடை வெயில் அதிகரித்து காணப்படுவது, பறக்கும்படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் கேமராக்களை திறம்பட செயல்படுத்த கைகொடுக்கிறது. சோலார் பேனலுடன் சார்ஜபிள் பேட்டரி உள்ளது. பகல்வேளையில் தகிக்கும் சூரிய வெப்பத்தை பேட்டரியில் சேமித்து வைத்துக்கொண்டு, சூரிய ஒளி இல்லாத, இரவு நேரங்களிலும் கேமரா, திறம்பட சுழன்று படம் பிடிக்கிறது.

