/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதிப்பு கூட்டுவதில் ஆர்வம் காட்டுங்கள்! பயிற்சி முகாமில் அழைப்பு
/
மதிப்பு கூட்டுவதில் ஆர்வம் காட்டுங்கள்! பயிற்சி முகாமில் அழைப்பு
மதிப்பு கூட்டுவதில் ஆர்வம் காட்டுங்கள்! பயிற்சி முகாமில் அழைப்பு
மதிப்பு கூட்டுவதில் ஆர்வம் காட்டுங்கள்! பயிற்சி முகாமில் அழைப்பு
ADDED : ஏப் 30, 2024 11:28 PM

உடுமலை;''விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால், விவசாயிகள் எளிதாக தொழில் முனைவோராக மாறலாம்,'' என கோவை வேளாண் பல்கலை., உதவி பேராசிரியர் கவிதா பேசினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை., யின், இயற்கை வள மேலாண்மை இயக்ககம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை மற்றும் இளஞ்சாரல் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், மண் மாதிரி சேகரிப்பு முறை மற்றும் தென்னையிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி, உடுமலை கொழுமம் ரோட்டிலுள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
கோவை வேளாண் பல்கலை., சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் பேசுகையில், ''சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, வேளாண் பல்கலை., வாயிலாக பல்வேறு தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது,'' என்றார்.
இளஞ்சாரல் தென்னை உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் ஜெயமணி உள்ளிட்டோர், விவசாயிகளை அறிமுகப்படுத்தி பேசினர். மண் மற்றும் நீர் மாதிரி சேகரிப்பு குறித்து பேராசிரியர்கள் மகேஸ்வரி, பரணி பேசினர்.
தென்னையில் மதிப்பு கூட்டல் குறித்து, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத்துறை உதவி பேராசிரியர் கவிதா பேசியதாவது:
விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்து, விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. தேங்காயிலிருந்து கொப்பரை மற்றும் எண்ணெய் மட்டுமே, உற்பத்தி செய்கின்றனர்.
ஆனால், தேங்காயில் இருந்து, 10க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யலாம். இதற்கான தொழில்நுட்ப பயிற்சிகள் அனைத்தும், வேளாண் பல்கலை., வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பல்வேறு வட்டாரங்களில் குளிர்பதன கிடங்கு இருந்தும், விவசாயிகள் பயன்படுத்தாமல் உள்ளனர். தேங்காய்த்துருவல், தேங்காய் பால் உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருட்களுக்கு, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.
விளைநிலங்களில், சோலார் உலர் கலன் அமைப்பதால், விவசாயிகளே மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யலாம். மேலும், அருகிலுள்ள வட்டாரங்களில் பிரதானமாக உள்ள விளைபொருட்களை, மதிப்பு கூட்டவும் விவசாயிகள் ஆர்வம் காட்டலாம்.உதாரணமாக, முருங்கை சார்ந்த பொருட்களுக்கு பிற நாடுகளில், அதிக வரவேற்பு உள்ளது. மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பால், விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோராக மாற முடியும்.
அதற்கான முயற்சிகளை விவசாயிகள் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில், இளஞ்சாரல் தென்னை உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகளுக்கு, இலவசமாக, மண் மற்றும் நீர்ப்பரிசோதனை செய்யப்படும் என பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உதவிப்பேராசிரியர் ஜெயஸ்ரீ நன்றி தெரிவித்தார்.