/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மனோபலம் பெருக சிரிங்க... சிரிச்சுட்டே இருங்க'
/
'மனோபலம் பெருக சிரிங்க... சிரிச்சுட்டே இருங்க'
ADDED : ஆக 16, 2024 11:59 PM

திருப்பூர்:திருப்பூர் நகைச்சுவை மன்றம் சார்பில், சுதந்திர தின விழா நிகழ்வாக, 'சிரிப்போம்... சிந்திப்போம்' என்ற தலைப்பில் பாட்டரங்கம் நடந்தது.
நகைச்சுவை மன்ற நிர்வாகி முரளி வரவேற்றார். திருப்பூர் நகைச்சுவை மன்றத் தலைவர் நாகராஜன், தலைமை வகித்து பேசுகையில்,''நல்லது, கெட்டதை தெரிந்துகொள்வது பொதுவானதாக இருந்தாலும், நல்லதை தெரிந்துகொள்வது தான் ஆன்மிகத்தின் பலம்.
அதோடு, நம் மனோ பலத்தை அறிந்து கொள்ள சிரிக்க வேண்டும். நல்ல காற்று, நீரை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்'' என்றார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் பேசுகையில்,''திருப்பூரை பொறுத்தவரை, தொழிலாளி, 8 மணி நேரம் உழைத்தால், முதலாளி, 12 மணி நேரம் உழைப்பார். உழைப்பவர்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே, இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன,'' என்றார்.
நகைச்சுவை மன்றத் துணைத் தலைவர் சிவராம் உள்ளிட்ட பலர் பேசினர். 'மனிதனுக்கு மனநிறைவு தருவது பணமே, உறவே' என்ற தலைப்பில் பேராசிரியர் மாரிமுத்து தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. பிரபு, சித்ராகிருஷ்ணன் ஆகியோர் பாட்டரங்கில் பேசினர்.
ஈரோடு முகில் கலைக்குழுவின் தேவி தலைமையில், மனவளக்கலை யோகா குறித்த விழிப்புணர்வு பாட்டரங்கம் நடத்தப்பட்டது.
மன்றத்தில் உறுப்பினர் களாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார்.

