/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை மதிப்பு உயர 'புளூசைன்' சான்று
/
பின்னலாடை மதிப்பு உயர 'புளூசைன்' சான்று
ADDED : ஆக 08, 2024 11:14 PM

திருப்பூர்;கார்பன் உமிழ்வை கண்டறிதல்; கட்டுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம், திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'பேர் டிரேட்' இந்தியா, 'சென்டர் பார் சோஷியல் மார்க்கெட்ஸ்' (சி.எஸ்.எம்.,) இணைந்து நடத்தப்பட்டது.
ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் ஆனந்த் உட்பட பலர் பேசினர்.
'பேர் டிரேட்' இந்தியா முதன்மை செயல் அலுவலர் அபிஷேக் ஜானி, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் புளூசைன் லேபிள் பெறுவதன் அவசியம் குறித்து பேசினார்.
வல்லுனர்கள் பேசியதாவது: உலக அளவில் அதிக ஆடை இறக்குமதி செய்யும் நாடுகள், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் தயாரிக்கப்படும் ஆடைகளை கொள்முதல் செய்வதில் அதிக கவனம் செலுத்த துவங்கி விட்டன. ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கு, 'கார்பன் புட் பிரின்ட்' தரச்சான்று பெறுவது அவசியமாகிறது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், ஏற்கனவே பசுமை சார் ஆடை உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, மிக சுலபமாக கார்பன் புட் பிரின்ட் தரச்சான்று பெறமுடியும். பஞ்சு கொள்முதல் துவங்கி ஆடை உற்பத்தியின் அனைத்து படிநிலைகளையும் ஆராய்ந்து, புளூசைன் நிறுவனம் சான்று வழங்குகிறது. அந்த தரச்சான்று பெறுவதன் வாயிலாக, ஐரோப்பிய சந்தையில் திருப்பூர் பின்னலாடைகளின் மதிப்பு உயரும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் திரளாக பங்கேற்று, தரச்சான்று பெறுவது தொடர்பான தங்கள் சந்தேகங்களை வல்லுனர்களிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.