/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பச்சை மிளகாய் விலையில் மாற்றம்: உற்பத்தி குறைவால் 'கிடுகிடு'
/
பச்சை மிளகாய் விலையில் மாற்றம்: உற்பத்தி குறைவால் 'கிடுகிடு'
பச்சை மிளகாய் விலையில் மாற்றம்: உற்பத்தி குறைவால் 'கிடுகிடு'
பச்சை மிளகாய் விலையில் மாற்றம்: உற்பத்தி குறைவால் 'கிடுகிடு'
ADDED : ஏப் 19, 2024 10:42 PM
உடுமலை:உற்பத்தி குறைவால், பச்சை மிளகாய் விலை உடுமலை பகுதியில், அதிகரித்துள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக, ஆண்டியகவுண்டனுார், குட்டியகவுண்டனுார், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், பாப்பனுாத்து உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும், குறிப்பிட்ட இடைவெளியில், இச்சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
சொட்டு நீர் பாசனம் அமைத்து, மேட்டுப்பாத்திகளில், தனியார் நாற்று பண்ணைகளில் நாற்று வாங்கி நடவு செய்கின்றனர். இங்கு, விளையும் மிளகாய் கேரளா, பொள்ளாச்சி, பழநி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
நடவு செய்த, மூன்றாவது மாதத்திலிருந்து மிளகாய் அறுவடை செய்யலாம். பயிர் பாதுகாப்பு, செடிகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பினை பொறுத்து ஏக்கருக்கு, மூன்று முதல் ஐந்து டன் வரை மகசூல் கிடைக்கிறது.
இந்தாண்டு உடுமலை பகுதியில் நிலவும் வறட்சியால், கிணறு மற்றும் போர்வெல்களில், நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால், பெரும்பாலான விவசாயிகள், காய்கறி சாகுபடியை கைவிட்டுள்ளனர்.
இந்த சீசனில், வழக்கத்தை விட பச்சை மிளகாயும் குறைந்த பரப்பிலேயே சாகுபடியானது. அதிலும், அதிக வெயில், வறட்சியான காற்று உள்ளிட்ட காரணங்களால் செடிகளில், நோய் பாதிப்பு ஏற்பட்டு உற்பத்தி குறைந்து விட்டது.
தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், பச்சை மிளகாய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உடுமலை உழவர் சந்தையில், நேற்றைய நிலவரப்படி பச்சை மிளகாய், கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. மழை பெய்து சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வரை, விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளது.

