/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமாகும் நெடுஞ்சாலை எல்லை கற்கள்! ஆக்கிரமிப்புக்கு உதவும் அலட்சியம்
/
மாயமாகும் நெடுஞ்சாலை எல்லை கற்கள்! ஆக்கிரமிப்புக்கு உதவும் அலட்சியம்
மாயமாகும் நெடுஞ்சாலை எல்லை கற்கள்! ஆக்கிரமிப்புக்கு உதவும் அலட்சியம்
மாயமாகும் நெடுஞ்சாலை எல்லை கற்கள்! ஆக்கிரமிப்புக்கு உதவும் அலட்சியம்
ADDED : ஜூலை 08, 2024 05:35 PM
உடுமலை:
மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய ரோடுகளில், நெடுஞ்சாலைத்துறையின் எல்லை கற்கள் மாயமாகியுள்ளதால், ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பிரச்னைக்கு தீர்வு காண மீண்டும் அளவீடு செய்து, எல்லைக்கற்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்கள் பராமரிப்பில், உடுமலை - தாராபுரம், பல்லடம், பொள்ளாச்சி - தாராபுரம் (ஒரு பகுதி) உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன.
மேலும், சின்னாறு, திருமூர்த்திமலை, செஞ்சேரிமலை, குமரலிங்கம், ஆனைமலை ரோடு உள்ளிட்ட மாவட்ட முக்கிய ரோடுகளும், இந்த கோட்டங்களின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிலுள்ள ரோடுகளில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, கடந்த, 2010ல், துறை சார்பில், அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், துறை அடையாளத்துடன் கூடிய எல்லைக்கற்கள் குறிப்பிட்ட இடைவெளியில், நட்டு வைக்கப்பட்டது.
இதனால், நெடுஞ்சாலைத்துறைக்குரிய இடம் துல்லியமாக தெரிந்தது; ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்பட்டது.
இந்த கற்கள் பராமரிப்பு குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் ஆர்வம் காட்டவில்லை. எனவே, பல இடங்களில், எல்லைக்கற்கள் மாயமாகி, ஆக்கிரமிப்புகள் தாராளமாக நடக்கிறது.
நகர மற்றும் புறநகர் பகுதிகளில், முக்கிய ரோடுகளை ஒட்டி, பல அடி துாரத்துக்கு நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதற்காக எல்லைக்கற்களை அப்புறப்படுத்துவது; மண் போட்டு மூடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
பின்னர், ரோட்டோரத்தில் நிரந்தர கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு, மாநில நெடுஞ்சாலைகளில், அதிக ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரோட்டோரத்தில், நிரந்தர கட்டுமானம் செய்து ஆக்கிரமிப்பு செய்த பிறகு, அவற்றை அகற்ற அதிகாரிகள் திணற வேண்டியுள்ளது.
உடுமலை பகுதியில், அனைத்து வகை போக்குவரத்தும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரோடு விரிவாக்கம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகியுள்ளது.
எதிர்பார்ப்புக்கு மாறாக, பயன்பாட்டிலுள்ள ரோடுகளும், ஆக்கிரமிப்பால் குறுகலாகி வருகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, நெடுஞ்சாலைத்துறை சார்பில், அனைத்து ரோடுகளிலும் அளவீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
துறைக்குரிய இடம் தெளிவாக தெரியும்படி, எல்லைக்கற்களை நட்டு, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டுவதால் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இப்பணிகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், ரோடு விரிவாக்க பணிகள் எதிர்காலத்தில், பெரிய சவாலாக மாறி விடும்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.