/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-பைலிங் நடைமுறை சிக்கல்: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
இ-பைலிங் நடைமுறை சிக்கல்: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
இ-பைலிங் நடைமுறை சிக்கல்: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
இ-பைலிங் நடைமுறை சிக்கல்: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஏப் 11, 2024 11:52 PM
உடுமலை:இ-பைலிங் நடைமுறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழை, எளியோர் முதல் அனைத்து தரப்பு மக்களும், தங்களது சிவில் மற்றும் கிரிமினல் பிரச்னைகள், வழக்குகளுக்கு தீர்வு காண நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். இதன் வாயிலாக, அவர்களுக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அனைத்து கோர்ட்களிலும் இ - பைலிங் நடைமுறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
இதற்கான சர்வர் உரிய திறனுடன் இல்லாத நிலையில் நாள்கணக்கில் இது செயல்படாமல் உள்ளது.
வக்கீல்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கான உரிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் நியமிக்க வேண்டும். உரிய கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
இவற்றுக்கு தீர்வு காணும் வரை, இந்த நடைமுறையை கட்டாயப்படுத்தக் கூடாது என வக்கீல்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இவற்றை முன்னிறுத்தி, நேற்றுமுன்தினம் திருப்பூர் மாவட்டம் முழுவதும், அனைத்து கோர்ட்களிலும் வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பார் அசோசியேசன், அட்வகேட்ஸ் அசோசியேசன் மற்றும் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இது குறித்து ஐகோர்ட் பதிவாளருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த கடிதம் திருப்பூர் மாவட்ட நீதிபதியிடம் சங்க நிர்வாகிகள் வாயிலாக வழங்கப்பட்டது. திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்களிலும் இந்த போராட்டம் நடந்தது. வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் அனைத்து கோர்ட்களிலும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.
இப்பிரச்னையில், தமிழக அரசும் தலையிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

