/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் செவிலியர் பாடப்பிரிவு சேர்க்கை மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு
/
அரசு பள்ளியில் செவிலியர் பாடப்பிரிவு சேர்க்கை மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு
அரசு பள்ளியில் செவிலியர் பாடப்பிரிவு சேர்க்கை மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு
அரசு பள்ளியில் செவிலியர் பாடப்பிரிவு சேர்க்கை மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 04, 2024 10:32 PM
உடுமலை;உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய கல்வியாண்டில் செவிலியர் பாடப்பிரிவுக்கான சேர்க்கை நடத்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, பாரதியார்நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர். மேல்நிலை வகுப்புகளில் மட்டுமே, 300க்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர்.
உடுமலையில் பெண்களுக்கான அரசு பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. இப்பள்ளிகளில், வால்பாறை, மறையூர், மூணார் பகுதிகளிலிருந்தும் வந்து படிக்கின்றனர். இங்கு, பெரும்பான்மையாக, பொருளாதார வசதியில்லாத மாணவியரே அதிகம் உள்ளனர்.
பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்கு செல்ல வழியின்றி, கடைகளிலும், கம்ப்யூட்டர் பயற்சி மையங்களிலும் பணிக்குச்செல்கின்றனர். பலரும், தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர்.
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் மாணவியர், படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை பெற, உயர்கல்வி அவசியமாக உள்ளது.
ஆனால், தொழிற்கல்வி வகுப்புகளை தேர்ந்தெடுப்பதால், உயர்கல்வியோடு, வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கிறது. இதனால், மாணவியர் தொழிற்கல்விக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் அடிப்படையில், இப்பள்ளியில் சத்துணவியல் தொழிற்கல்வி பாடம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் மேல்நிலை வகுப்புகளில் சேரும் மாணவியர் தொழிற்கல்வி பிரிவில் செவிலியர் பாடப்பிரிவை அதிகம் கேட்டு வந்தனர்.
பெண் குழந்தைகளுக்கான பள்ளியாக இருப்பதால், செவிலியர் பாடப்பிரிவை கொண்டுவர பெற்றோரும், கல்வியாளர்களும் அதிக விருப்பம் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், 2021ல் செவிலியர் தொழிற்கல்வி பாடப்பிரிவு பள்ளியில் செயல்படுத்தப்பட்டது. இங்கு படிக்க வரும் மறையூர், மூணார் உள்ளிட்ட பகுதி மாணவியர் இப்பாடபிரிவை தேர்ந்தெடுக்க அதிக ஆர்வம் காட்டினர். ஆனால் நடப்பாண்டிலேயே இப்பாடப்பிரிவு நிறுத்தப்பட்டு விட்டது. பெண் குழந்தைகளுக்கான பள்ளியாக இருப்பதால், இப்பள்ளியிலும் செவிலியர் பாடப்பிரிவு தேவை என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய கல்வியாண்டில் இப்பாடப்பிரிவை சேர்க்க மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: இப்பள்ளியில், செவிலியர் பாடப்பிரிவு நடப்பாண்டு முதல் பிளஸ் 1 சேர்க்கை நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த பாடத்துக்கான ஆசிரியர் இல்லாததால் பாடப்பிரிவு நிறுத்தப்பட்டது.
அருகிலுள்ள மற்றொரு அரசு பள்ளியில் ஆசிரியர் இருப்பதால் செவிலியர் பாடம் துவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.

