/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் அருகே நள்ளிரவில் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி
/
திருப்பூர் அருகே நள்ளிரவில் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி
திருப்பூர் அருகே நள்ளிரவில் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி
திருப்பூர் அருகே நள்ளிரவில் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி
ADDED : ஏப் 10, 2024 12:49 AM

திருப்பூர்:காங்கயம் அருகே அரசு பஸ் மீது, கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று வயது குழந்தை உட்பட, ஐந்து பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகர், புதுநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன், 60; திருப்பூரில் சாய ஆலை நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா, 57. தம்பதிக்கு சசிதரன், 30, இளவரசன், 26 என்ற மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சசிதரனுக்கு திருமணமாகி ஹரிவி வித்ரா, 30 என்ற மனைவியும், சாக் ஷி என்ற, மூன்று மாத பெண் குழந்தையும் இருந்தது.
சந்திரசேகரனுக்கு, 60 வயது ஆனதால், திருக்கடையூரில் உள்ள அமிர்த காடேசுவரர் கோவிலுக்கு சென்று, 60ம் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக, திருப்பூரில் இருந்து குடும்பத்துடன் காரில் கிளம்பி நேற்று முன்தினம் சென்றனர். அன்றைய தினம் மாலை திருமணம் வழிபாடுகளை முடித்து விட்டு திருப்பூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இரண்டாவது மகனான இளவரசன் காரை ஓட்டி வந்தார்.
நேற்று நள்ளிரவு, 1:00 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கயம், ஓலப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில், கார் முழுவதும் சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த இளைய மகன் இளவரசன், அவரின் தந்தை சந்திரசேகரன், தாய் சித்ரா, அண்ணி ஹரிவி வித்ரா மற்றும் மூன்று மாத குழந்தை ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த மூத்த மகன் சசிதரன் மீட்கப்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்ததும் காங்கயம் போலீசார், விபத்து நடந்த இடத்துக்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூரை சேர்ந்த சாமிநாதன், 51, நடத்துனர் பழனிசாமி, 53 உள்ளிட்ட பயணிகள் எவ்வித காயமின்றி தப்பினர்.
கோர விபத்தில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் சிக்கிய வாகனங்களை நீண்ட போராட்டத்துக்கு பின், வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

