/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர் இல்லாமல் தடுமாறும் அரசுப்பள்ளிகள்
/
ஆசிரியர் இல்லாமல் தடுமாறும் அரசுப்பள்ளிகள்
ADDED : ஆக 19, 2024 12:08 AM
திருப்பூர்:சிவகங்கை மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் உதயகுமார், பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த ஆக., 2ம் தேதி பொறுப்பேற்றார்.
ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், அலுவலர்களை சந்தித்து மாவட்ட நிலவரங்கள் குறித்து தினசரி கேட்டறிந்த அவர், பள்ளிகளில் ஆய்வுப்பணியையும் துவக்கியுள்ளார்.
முதன்மை கல்வி அலுவலருக்கு, மாவட்ட ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
கிடப்பில் கோரிக்கைகள்
மாவட்ட கல்வித்துறையில் அடிப்படை கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். வகுப்பறை, ஆசிரியர் தேவை நிறைய உள்ளது. மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளி பணிகளை கவனிக்க, அலுவல் பணிக்கு போதிய பணியாளர், ஊழியர் இல்லை.
பல மாதங்களாக அனுப்பி வைத்த தலைமை ஆசிரியரின் கோரிக்கை கடிதங்கள், கிடப்பில் உள்ளது. அதனை துாசு தட்டி, களையெடுத்து, கூடுதலாக பணியாளர் நியமிக்க வேண்டியது, அவசர அவசியமாக உள்ளது.
ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, பெரும்பாலான பள்ளிகளில், அனுபவம் வாய்ந்த, சிறப்பான ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. நடுநிலைப்பள்ளிகளின் கல்வித்தரத்தை அடிக்கடி ஆய்வு செய்திடல் வேண்டும்.
ஆசிரியர்கள் வேண்டும்
கடந்த ஜூலை மாதம் நடந்த பணி மாறுதல் கவுன்சிலிங்கில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பட்டதாரி, இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் என, 250க்கும் மேற்பட்டோர் பணி மாறுதல் பெற்று சென்று விட்டனர்.
அதிகளவில் பட்டதாரி ஆசிரியர் சென்று விட்டதால், ஆறு முதல்,ஒன்பது வகுப்பு வரையிலான கல்வித்தரம் கேள்விகுறியாகும் நிலை உள்ளது. வேறு மாவட்டங்களில் இருந்து, நுாற்றுக்கும் அதிகமான ஆசிரியர் பணி மாறுதல் பெற்று வந்தாலும், முந்தைய இயல்பு நிலை பள்ளிகளில் முழுமையாக திரும்பவில்லை. எனவே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்கும் வேலைகளை உடனடியாகதுவங்க வேண்டும்.
தக்க வைப்பது அவசியம்
பிளஸ் 2 தேர்வில், கடந்த, 2019, 2020 ல் அடுத்தடுத்து முதலிடம் பெற்று அசத்திய திருப்பூர் மாவட்டம், 2022 ல் சறுக்கி, இரண்டாமிடம் சென்றாலும், ஒரே ஆண்டில் மீண்டு வந்த, 2023ல், 97.45 சதவீத தேர்ச்சியை எட்டிபிடித்து முதலிடத்தை தக்க வைத்தது.
மூன்று ஆண்டுகளாக முதலிடம் பெற்று, சரித்திர சாதனை படைத்து முன்னிலையில் உள்ளது. இது தொடர வேண்டும் என்றால், அதற்கேற்ற முயற்சிகளை இப்போதிருந்தே துவங்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர்.