/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லாங்குழி சாலையில் பஸ் எப்படி போகும்?
/
பல்லாங்குழி சாலையில் பஸ் எப்படி போகும்?
ADDED : ஜூலை 07, 2024 12:15 AM

திருப்பூர்:'போக்குவரத்து விதிமீறி பலர் ஒரு வழிப்பாதையில் வருகின்றனர்; அத்துடன் மாதக்கணக்கில் சரிசெய்யாமல் குழியாக உள்ள சாலையில் எப்படி பஸ் இயக்குவது?,' என டிரைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திருப்பூர், புஷ்பா தியேட்டர் ஸ்டாப் ரவுண்டானா சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, 'சிக்னல் ப்ரீ'யாக மாற்றப்பட்டது. பி.என்., ரோட்டில் இருந்து அவிநாசி ரோடு, புஷ்பா ஸ்டாப் வர வேண்டிய பஸ்கள் சிக்னலில் காத்திருக்காமல், ரயில்வே மேம்பாலம் சுற்றி, ஹார்வி ரோடு வளைவு, வழியாக திரும்பி, புஷ்பா சந்திப்பு ஸ்டாப் வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இம்மாற்றம் செய்யப்பட்ட போதே சர்வீஸ் ரோடாக இருந்த பாதை என்பதால், 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர், செவிசாய்க்கவில்லை. வாகனங்கள் அவ்விடத்தை கடந்து சென்றால் போதும் என அப்படியே விட்டனர்.
இவ்வாறு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து சாலை நிலை மேலும் மோசமாகி விட்டது. தற்போது, குண்டும் குழியுமாக பஸ்களே ஆட்டம் காணும் நிலையில் உள்ளது. தற்போது வரை 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ளவில்லை. குழியை மூடி புதிய தார்சாலையை நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அமைக்கவில்லை. இதனால், வளைவு பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
போக்குவரத்து மாற்றம் செய்த போதே இச்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால், போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், அத்துமீறி, கார், டூவீலர்கள் பஸ்கள் கடந்து செல்ல வழியின்றி, இடையூறாக ஒருவழிப்பாதையில் முன்னேறுகின்றன. இத்துடன், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் எப்படி பஸ் இயக்குவது என டிரைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் குழியை மூடி சாலை அமைக்க வேண்டும். விதிமீறுவோரை போலீசார் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.