/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்திப்பில் தாறுமாறாக திரும்பும் வாகனங்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
/
சந்திப்பில் தாறுமாறாக திரும்பும் வாகனங்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
சந்திப்பில் தாறுமாறாக திரும்பும் வாகனங்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
சந்திப்பில் தாறுமாறாக திரும்பும் வாகனங்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
ADDED : மே 20, 2024 11:29 PM

உடுமலை;உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் ஏற்படும் நெரிசலுக்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியானது, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் நெரிசலை தவிர்க்க, பஸ் ஸ்டாப் நிழற்கூரை முதல் தளி ரோடு சந்திப்பு வரை, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டு, தானியங்கி சிக்னல் பொருத்தப்பட்டது.
அப்போது, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் சேரும் வகையில், போக்குவரத்து திட்டமிடப்பட்டிருந்தது.
நகராட்சி சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால், இடவசதி ஏற்பட்டு, தாராபுரம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக தேசிய நெடுஞ்சாலையில், சேர அனுமதிக்கப்பட்டது. குழப்பத்தை தவிர்க்க, சென்டர் மீடியன் முடிவு பகுதியிலும், புதிதாக விரிவாக்கப்பட்ட இடத்திலும், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், தடுப்பு வைக்கப்பட்ட பகுதி வழியாக இருபுறமும் செல்கின்றனர். பஸ் மற்றும் இதர வாகனங்கள் காமராஜர் சிலையை சுற்றிச்செல்கின்றன.
தாறுமாறாக அனைத்து ரோடுகளிலும், திரும்பும் வாகனங்களால், அவ்விடத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து, தாராபுரம் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
இது குறித்து போக்குவரத்து போலீசார் முழுமையாக ஆய்வு செய்து, அவ்விடத்தில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவையான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

