/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்டியம்மன் கோவில் இடத்தை மீட்கணும்!
/
கண்டியம்மன் கோவில் இடத்தை மீட்கணும்!
ADDED : ஆக 20, 2024 02:19 AM
உடுமலை:மூவர் கண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை ஹிந்து அறநிலையத்துறையினர் அகற்ற, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது. தேரோடும் வீதியுடன் பரந்து விரிந்திருந்த இக்கோவில், தற்போது போதிய வழித்தடம் கூட இல்லாத அளவுக்கு, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. கோவில் இடம் குறித்த எல்லைகற்களும் மாயமாகி விட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: சோமவாரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியைச்சேர்ந்த, 20க்கும் அதிகமான கிராம மக்கள் வழிபட்டு வந்த மூவர் கண்டியம்மன் கோவில் பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும். முன்பு, ஆண்டுக்கு ஒரு முறை தேரோட்டம் நடைபெறும்.
தேரோடும் வீதிகளுடன், சுமார் 3 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், இக்கோவில் அமைந்திருந்தது. தற்போது பல்வேறு ஆக்கிரமிப்புகளால், கோவிலுக்கு முறையான வழித்தடம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் பங்களிப்புடன் இந்த கோவில் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வழித்தடம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தொன்மை வாய்ந்த இக்கோவிலை மீட்கும் வகையில், ஹிந்து அறநிலையத்துறையினர் கோவிலுக்குரிய இடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும்.
முதற்கட்டமாக அளவீடு செய்து, கோவில் எல்லைகள் குறித்த எல்லைக்கற்கள் அமைக்க வேண்டும். புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்டு, கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

