/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலையில் உருவாகி ஆற்றில் சங்கமிக்கும்ஓடையை காணோம்!மீட்டெடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
மலையில் உருவாகி ஆற்றில் சங்கமிக்கும்ஓடையை காணோம்!மீட்டெடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மலையில் உருவாகி ஆற்றில் சங்கமிக்கும்ஓடையை காணோம்!மீட்டெடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மலையில் உருவாகி ஆற்றில் சங்கமிக்கும்ஓடையை காணோம்!மீட்டெடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2024 02:59 AM

உடுமலை:உடுமலை அருகே, பிரதான ஆறுகளின் துணை ஓடை ஆக்கிரமிப்புகளாலும், புதர் மண்டியும் மாயமாகி வருகிறது. ஓடையை பாதுகாக்க நீர் வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
உடுமலை அருகே, திருமூர்த்திமலை, பொன்னாலம்மன் சோலை, தீபாலபட்டி, நல்லாறு மலை, பாண்டியன் கரடு பகுதிகளில் இருந்து வரும், மழை வெள்ளம் வரப்பள்ளம் ஓடையில் இணைகிறது.
இந்த ஓடை வலையபாளையம், வல்லக்குண்டாபுரம் பகுதிகளில் பயணித்து, நல்லாறாகவும், அதனுடன் பலாறும் இணைந்து, உடுமலையில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளாக உள்ளது.
இயற்கையான வெள்ள நீர் ஓடையாகவும், இரு புறமும் உள்ள பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு, நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்த ஓடையில், மழை காலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு காணப்படும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஓடையின் இரு புறமும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் அகலமாகவும், மிகப்பெரிய ஓடையாகவும் இருந்தது, தற்போது குறுகலாக மாறியுள்ளது.
மேலும், அதிகாரிகள் ஓடையை கண்டு கொள்ளாதாதல், பராமரிப்பு இல்லாமல், முட்செடிகள், கொடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது. ஓடையில் தேங்கியிருந்த மணல் திருடப்பட்டு, இயற்கை சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
வரப்பள்ளம் ஓடை, அகலமாகவும், ஆழமாகவும் அதிகளவு வெள்ள நீர் ஓடும் ஓடையாகவும் உள்ளது. நல்லாற்றில் இணைத்து, ஆறாக பயணிக்கிறது.
நீர் வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, மலையடிவாரத்திலுள்ள இந்த ஓடை, ஆக்கிரமிப்புகளால் குறுகியுள்ளது.
மேலும், முட்செடிகள், கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. தேங்கியிருந்த மணல் திட்டுக்களும், திருடப்பட்டதால், வெள்ள நீர் ஒரு சில நாட்களில் வடிந்து விடுகிறது.
இதனால், இரு புறமும் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கிறது. வெள்ளம் வரும் காலங்களில், நீர் வழித்தடம் மறிப்பதால், விவசாய நிலங்களுக்குள் புகுந்தும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
எனவே, வரப்பள்ளம் ஓடையை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். மழை காலங்களில் கிடைக்கும் நீரை முறையாக சேமித்து, இரு புறமும் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.