/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கலம் தாலுகா! பொதுமக்கள் - விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
மங்கலம் தாலுகா! பொதுமக்கள் - விவசாயிகள் எதிர்பார்ப்பு
மங்கலம் தாலுகா! பொதுமக்கள் - விவசாயிகள் எதிர்பார்ப்பு
மங்கலம் தாலுகா! பொதுமக்கள் - விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 06, 2025 06:38 AM

திருப்பூர்; கிராமங்களை இணைத்து, புதிதாக மங்கலம் தாலுகா உருவாக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
திருப்பூர் வருவாய் மாவட்டம், ஒன்பது தாலுகாக்களுடன் செயல்பட்டு வருகிறது. 20 கிராமங்களை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு தாலுகாவில், மேற்கு பகுதியில் இடுவாய், ஆண்டிபாளையம், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. தெற்கு தாலுகா அலுவலகம், செவந்தாம்பாளையத்தில் இயங்கி வருகிறது. இதனால், தாலுகாவின் எல்லையோர கிராம மக்கள், பல்வேறு தேவைகளுக்காக தாலுகா அலுவலகத்துக்கு சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால், மங்கலத்தை மையமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சியின், 60 வார்டுகளை உள்ளடக்கி, திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகாக்கள் செயல்படுகின்றன. பல லட்சம் மக்கள் வசிக்கும் மிகப்பெரிய நகராக உள்ளது. தெற்கு தாலுகாவில், 20 வருவாய் கிராமங்கள் உள்ளன.
செவந்தாம்பாளையத்தில் செயல்படும் தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. மங்கலம், இடுவாய், ஆண்டிபாளையம் உள்பட பல்வேறு கிராம மக்களும், விவசாயிகளும், சான்றுகள் பெறுவது உள்பட வருவாய்த்துறை சார்ந்த தேவைகளுக்கு, தாலுகா அலுவலகத்துக்கு செல்ல 15 கி.மீ., துாரத்துக்கு மேல் பயணிக்கவேண்டியுள்ளது.
இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளதால், மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மங்கலம் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயம், விசைத்தறி தொழில், ஓ.இ.,மில் என பல்வேறு வகையான சிறு தொழில்கள் நடைபெற்றுவருகின்றன. கல்குவாரிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது ஒன்பது தாலுகா உள்ள நிலையில், மங்கலத்தை மையமாக கொண்டு, மங்கலம், ஆண்டிபாளையம், இடுவாய் மற்றும் பல்லடம், அவிநாசி தாலுகாக்களில் இணைந்துள்ள, மங்கலத்துக்கு அருகாமையிலுள்ள பூமலுார், வேலம்பாளையம், வஞ்சிபாளையம் போன்ற கிராமங்களை இணைத்து, புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.
இதன்வாயிலாக, பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் குறு, சிறு தொழில்முனைவோர் பயன்பெறுவர். அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும். புதிய தாலுகா உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கலெக்டர் உள்பட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.