/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இங்கும் உருவாகலாம் 'மனு பாக்கர்'
/
இங்கும் உருவாகலாம் 'மனு பாக்கர்'
ADDED : ஆக 02, 2024 05:15 AM

திருப்பூர் : ''சரப்ஜோத் சிங் - மனு பாக்கரைப் போல் திருப்பூரில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை வெல்லும் வீரர், வீராங்கனைகள் உருவாக முடியும்'' என்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறார், திருப்பூர், பிளாட்டோஸ் ரைபிள்ஸ் கிளப் நிறுவனர் ஹரிகிருஷ்ணன்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான, 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றார். இரண்டாவது பதக்கமும் இவர் மூலம் கிடைத்தது. 10 மீ.,'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து, வெண்கலம் வென்றார். சரப்ஜோத் சிங் - மனு பாக்கருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிகின்றன.
100 சதவீத கவனம்
''துப்பாக்கி சுடுதலில் விரிவான தொடர் பயிற்சியும், கவனம் சிதறாத கடும் முயற்சியும் இருந்தால் எளிதில் சாதிக்க முடியும்'' என்று கூறுகிறார், திருப்பூர், சின்னாண்டிபாளையம், பிளாட்டோஸ் ரைபிள்ஸ் கிளப் நிறுவனர், ஹரிகிருஷ்ணன்.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
யோகாவில் அசத்த, 15 நிமிட பொறுமை வேண்டும். துப்பாக்கி சுடுதலில் அசத்த ஒரே இடத்தில், ஒரு மணி நேரத்துக்கு பொறுமை, நிதானம், கவனம் மிக அவசியம். துப்பாக்கி சுடுதலில், 100 சதவீத கவனமும், 'பாயின்டிங்' (இலக்கான சிறிய புள்ளி) மீது இருக்க வேண்டும். மிக துல்லிய கவனிப்பு, இலக்கை நோக்கிய சரியான பாய்ச்சல் எளிதில் வெற்றியை தேடித்தந்து விடும்.
நேரடிப் போட்டி
மற்ற போட்டிகளைப் போல் பள்ளி, மாவட்ட அளவில், மண்டல, வட்டார அளவில் என்பதெல்லாம் துப்பாக்கி சுடுதலில் கிடையாது. நேரடி மாநில போட்டி, அதில் கச்சிதமாக வெற்றி பெற்றால், தேசிய, அகில இந்திய போட்டிகளுக்கு சென்று விட முடியும்.
துப்பாக்கி சுடுதலில் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க, தனி களம் ஏற்படுத்தியுள்ளோம். 18 வயதை தாண்டிய ஆர்வமுள்ள, கிளப்பில் இணைந்து கொண்டவர்களுக்கு தேவையான முழுமையான பயிற்சிகளை தருகிறோம். திருப்பூரில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மண்டல அளவிலான போட்டிக்கு மகுடம் சூட அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சரப்ஜோத் சிங் - மனு பாக்கரை போல் நாம் திருப்பூரில் இருந்து வீரர், வீராங்கனைகள் உருவாவர். இவ்வாறு, ஹரிகிருஷ்ணன் கூறினார்.
துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி செலவு மிகுந்தது என்று பெற்றோர் பயப்படுவதும், குழந்தைகளை இத்தகைய பயிற்சியில் ஈடுபடுத்தாததற்குக் காரணமாக அமைகிறது.
''பெற்றோர் துப்பாக்கி சுடுதலை 'காஸ்ட்லி'யான விளையாட்டு என நினைக்கின்றனர்; அப்படியில்லை.
துப்பாக்கி சுடுதல் என்பது எளிமையான விளையாட்டு. துல்லியத்தன்மை, கவனம், நுணுக்கம் தெரிந்தால் அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறி சென்று கொண்டே இருக்கலாம்.
இறக்குமதி செய்யப்படும் ஏர்கன்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்படுகிறது; செலவும் அதிகமில்லை'' என்று கூறுகிறார் பிளாட்டோஸ் ரைபிள்ஸ் கிளப் நிறுவனர் ஹரிகிருஷ்ணன்.