/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூலி உயர்வு பேச்சுவார்த்தை; விசைத்தறியாளருக்கு அழைப்பு! நாளை கலெக்டர் ஆபீசில் நடக்கிறது...
/
கூலி உயர்வு பேச்சுவார்த்தை; விசைத்தறியாளருக்கு அழைப்பு! நாளை கலெக்டர் ஆபீசில் நடக்கிறது...
கூலி உயர்வு பேச்சுவார்த்தை; விசைத்தறியாளருக்கு அழைப்பு! நாளை கலெக்டர் ஆபீசில் நடக்கிறது...
கூலி உயர்வு பேச்சுவார்த்தை; விசைத்தறியாளருக்கு அழைப்பு! நாளை கலெக்டர் ஆபீசில் நடக்கிறது...
ADDED : ஆக 06, 2024 11:36 PM

பல்லடம் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு, விசைத்தறி சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில், 90 சதவீதம் கூலி அடிப்படையில் இயங்கி வருகிறது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, ஜவுளி உற்பத்தியாளர்களுடன், கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
ஆனால், ஒப்பந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையிலான அமைதி பேச்சு வார்த்தை, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்க உள்ளது.
இது குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிர மணியம் கூறியதாவது:
கடந்த, 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்ட கூலியில் இருந்து, 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், 2022ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது. இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கவில்லை.
தொடர்ந்து, 39 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனால், அமைச்சர்கள் தலைமையில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில், 15 சதவீத கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று, போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.
தற்போது, மீண்டும் பழையபடி கூலியை குறைத்து வழங்கி வருகின்றனர். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், பழைய கூலிக்காகவே இன்று வரை போராடி வருகிறோம். இதனால், விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
நாளை (8ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், கூலி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.