/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய ரேஷன் கார்டு! இனி, காத்திருக்க வேண்டாம்
/
புதிய ரேஷன் கார்டு! இனி, காத்திருக்க வேண்டாம்
ADDED : ஆக 23, 2024 01:52 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஓராண்டாக தேங்கிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 3,800 புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி துவங்கியது.
தமிழக அரசு, மகளிர் உரிமை திட்டத்தில், ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஏழை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கிவருகிறது. திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கப்பட்டதையடுத்து, கடந்த 2023 ஜூன் மாதம் முதலே புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.
தேங்கிய விண்ணப்பங்கள்
பயனாளிகளுக்கு செப்டம்பர் மாதம் முதலே, மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அனைத்து மாவட்டங்களிலும் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை, புதிய கார்டு அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த ஏப்ரலில் துவங்கி ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிய ரேஷன் கார்டு கோரும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கின.
தற்போது, ஓராண்டாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு கோரும் பத்தாயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி வேகமெடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு கோரும் பத்தாயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி வேகமெடுத்துள்ளது.
1,400 கார்டுகள் தயார்
அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி, கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. மாவட்ட வழங்கல் பிரிவினர் கூறியதாவது:
புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பங்கள், பல்வேறு வகைகளில் அலசி ஆராயப்படுகிறது. குறிப்பாக, ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனரா; ஒரே குடும்பத்தில் வசிப்போர், பெயர் நீக்கம் செய்து, தனித்தனி கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனரா என, ஏற்கனவே உள்ள தரவுகள் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகிறது. சந்தேக விண்ணப்பங்கள் மீது, கள ஆய்வு நடத்தி, உறுதி செய்யப்படுகிறது. தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 3,800 புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இதுவரை, 1,400 புதிய கார்டு அச்சிடும் பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள கார்டு அச்சிடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்தந்த தாலுகா வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு கார்டுகள் அனுப்பிவைக்கப்படும். இதுகுறித்த எஸ்.எம்.எஸ்., அடிப்படையில் சென்று, கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.