ADDED : ஆக 02, 2024 05:34 AM

திருப்பூர் : மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சி சார்பில், மறியல் போராட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் குமரன் சிலை முன் இந்திய கம்யூ., திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இரு கட்சியினரும் திரண்டனர்.
அங்கிருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட, 88 பெண்கள் உட்பட, 271 பேரை போலீசார் கைது செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய ஏராளமான போலீசார் வாகனங்களுடன் தயாராக இருந்தனர். வழக்கமாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவர்களை போலீசார், ரோட்டில் அமர்ந்தவுடன் கைது செய்து வாகனத்துக்கு அழைத்து சென்று விடுவர். ஆனால், இம்முறை கட்சியினருடன் போலீசாரும் ஊர்வலமாக வந்து, அவர்கள் பேசி முடிக்கும் முறை பொறுமை காத்து பின் கைது செய்தனர். 15 நிமிடத்துக்கு மேல் நடந்த சாலை மறியல் காரணமாக ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அவிநாசி
அவிநாசி - சேவூர் சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு தபால் நிலையம் முன்பு அவிநாசி- கோவை சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் காமராஜ், சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூ., திருப்பூர் புறநகர் மாவட்ட துணை செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்
பல்லடத்தில் நடந்த மறியலுக்கு மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் பவித்ரா தேவி, இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் நதியா ஆகியோர் தலைமை வகித்தனர். மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பாலன், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம், ஊத்துக்குளி மற்றும் மடத்துக்குளம் என, எட்டு இடங்களில் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 1075 பேரை போலீசார் கைது செய்தனர்.