/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மறு அவதாரம்' எடுக்கும் அரிய வகை மரங்கள்
/
'மறு அவதாரம்' எடுக்கும் அரிய வகை மரங்கள்
UPDATED : ஆக 26, 2024 02:25 AM
ADDED : ஆக 25, 2024 10:55 PM

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினரின் முயற்சியால் அரிய வகை மரங்கள், 'மறு அவதாரம்' எடுத்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 19 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்த 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், அடுத்த இலக்கை நோக்கிய பயணத்தை துவங்கியுள்ளனர். இதுவரை 98 வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மலைவேம்பு, புங்கன், நாட்டு வேம்பு என்ற வழக்கமான நாட்டு மரங்களுடன், பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ள, அழிவின் விளிம்பில் உள்ள, அரியவகை மரங்களையும் பெருக்கி கொண்டிருக்கின்றனர்.
நருவிழி, ஏழிலை பாலை, கொன்னை, வெப்பாலை, தேற்றான் கொட்டை, ஆச்சா, பூந்திக்கொட்டை, சிவன் குண்டலம், கருக்குவாச்சி, திருவோடு, ஜகரந்தை, தான்றிக்காய், நாகலிங்கம், தடசு, மற்றவை, ஆயன் - ஆவி, சொர்கம், புத்திரன் ஜீவா, வருகமஞ்சள், ஆத்தி, இலைப்புரசு, கரும்புரசு, ருத்ராட்சம், உதியன், தண்ணீர்க்காய் மரம், வாதாம், குமுள், பராய், கிருஷ்ணகமலம் உள்ளிட்ட அரிய வகை மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.
புறநானுாறு பாடல்களில் இடம்பெற்றிருந்த நாட்டு மரக்கன்றுகள் பெயரை உற்றுநோக்கி, பல்வேறு நாட்டு மரக்கன்றுகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து வளர்க்கப்படுகின்றன.
மணம் பரப்பும் வல்லமை பெற்ற மரங்கள், பசியை போக்க காய், கனிகளை கொடுக்கும் மரங்கள், சுகந்தமான சூழலை தோற்றுவிக்கும் மலர்வகை மரங்கள் என, விதவிதமான மரங்கள் இங்கே வளர்க்கப்படுகின்றன. அழிவின் விளிம்பிலுள்ள அரியவகை மரங்களுக்கும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு, மறு அவதாரம் அளித்து வருகிறது.
நம் எதிர்கால சந்ததியினருக்கு, மரங்கள் மட்டுமே நாம் விட்டுச்செல்லும் உண்மையான சொத்து என்பதை புரிய வைத்துள்ளனர், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர்.
---
திருவோடு, ஆத்தி, தான்றிக்காய் மரங்கள்.

