/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டைக்கடலை சாகுபடி செய்ய திட்டம்
/
கொண்டைக்கடலை சாகுபடி செய்ய திட்டம்
ADDED : ஆக 20, 2024 10:21 PM
உடுமலை: நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை சீசனுக்கு மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை சீசனில், முன்பு, பிரதானமாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
மானாவாரியாக, விருகல்பட்டி, கொங்கல்நகரம், தொட்டம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 3 ஆயிரம் ெஹக்டேருக்கும் அதிகமான பரப்பில், கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இச்சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது.
சாகுபடிக்கு தேவையான விதைகளை, விவசாயிகளே இருப்பு வைத்து பயன்படுத்துகின்றனர். வேளாண்துறை சார்பிலும், விதைப்புக்கான விதைகள் மானியத்தில் வினியோகிக்கப்படுகிறது. இச்சாகுபடியில், பல்வேறு நோய்த்தாக்குதலால், விளைச்சலும் குறைந்த நிலையில், போதியவிலையும் கிடைப்பதில்லை.
இதனால், நஷ்டம் ஏற்பட்டு, இச்சாகுபடி, முற்றிலுமாக காணாமல் போகும் நிலை உருவானது. இந்நிலையில், இந்தாண்டு, கோடை கால மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது.
எனவே, விளைநிலங்களை உழவு செய்து, வடகிழக்கு பருவமழை சீசனில் கொண்டைக்கடலை விதைப்பு செய்ய தயாராகி வருகின்றனர்.

