/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேமிப்பின் சிறப்பு உணர்ந்த மாணவர்கள் மாநகராட்சி பள்ளியில் நெகிழ்ச்சி
/
சேமிப்பின் சிறப்பு உணர்ந்த மாணவர்கள் மாநகராட்சி பள்ளியில் நெகிழ்ச்சி
சேமிப்பின் சிறப்பு உணர்ந்த மாணவர்கள் மாநகராட்சி பள்ளியில் நெகிழ்ச்சி
சேமிப்பின் சிறப்பு உணர்ந்த மாணவர்கள் மாநகராட்சி பள்ளியில் நெகிழ்ச்சி
ADDED : மார் 02, 2025 04:54 AM

விளையும் பயிர் முளையிலேயே தெரியும். வளர்ந்து நிற்கும் அந்த பயிர், விளைவிப்போரின் எண்ணங்களின் சான்றாகவும் அமையும்.
அப்படியாக, மாணவர் மனதில் அன்பு, பண்பு, பரிவு, பாசம், உதவும் குணம், சேமிப்பு என்பது போன்ற விதைகளை துாவி, நற்கனி தரும் மரங்களாக அவர்களை வார்த்தெடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர், திருப்பூர், புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்.
முதல் வகுப்பு துவங்கி, 5ம் வகுப்பு வரையிலான பள்ளி அது; 6 முதல், 10 வயது வரையுள்ள, 330 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
குழந்தைகள் மனதில் 'சேமிப்பு' என்ற விதையை துாவும் முயற்சியாக, கடந்த ஜூலை மாதம். ஒவ் வொரு குழந்தையிடமும் ஒரு உண்டியலை வழங்க ஏற்பாடு செய்தார் பள்ளி தலைமையாசிரியர் மோகன்.
'இங்க பாருங்க குழந்தைகளா, அடுத்த வருஷம் மார்ச் மாதம் (இம்மாதம்) ஸ்கூல் ஆண்டு விழா நடக்கும்; அதுக்குள்ள யாரு அதிகமான தொகை சேர்த்து வைக்கிறீங்களோ, அந்த விழாவுல உங்களுக்கு பரிசு கொடுப்போம்'' என்ற அறிவிப்புடன், 'மாணவர் மனசு' என்ற பெயரில் ஒரு பெட்டியையும் வைத்தனர்.
'சேமிக்கும் பணத்தை எதுக்காக செலவழிக்க போறீங்கன்னு எழுதி, அதை அந்த பெட்டியில போடணும்' எனவும் கூறினர். சேமிப்பில் நிரம்பிய உண்டியலை, தங்கள் ஆசிரியர்களிடம் வழங்கினர் பிள்ளைகள்.
''சில்லரைகளாலும், ரூபாய் நோட்டுகளாலும் நிரம்பியிருந்த உண்டியலை உடைத்த போது, நெகிழ்ந்து போனோம்'' என்றார் தலைமையாசிரியர் மோகன்.
அவர் கூறியதாவது:
சேமித்த தொகையில் சைக்கிள் வாங்க வேண்டும். புத்தாடை வாங்க வேண்டும். ஸ்கூல் பேக் வாங்க வேண்டும் என்பது போன்ற, குழந்தைகளின் சின்னஞ்சிறு கனவுகளை அந்த சேமிப்புத் தொகை தன்னுள் சுமந்திருந்ததை, 'மாணவர் மனசு' பெட்டியின் வாயிலாக அறிந்து, வியந்து போனோம்.
அதில் ஒரு மாணவி, சேமித்த தொகையில், என் அப்பா, அம்மாவுக்கு பிறந்த நாள், திருமண நாள் பரிசு வாங்கி தரணும் என எழுதி வைத்திருந்ததை கண்டு, நெகிழ்ந்து போனோம்.
இதற்கெல்லாம் மேலாக, 3,189 ரூபாய் சேமித்து வைத்திருந்த சீதாலட்சுமி என்ற, 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது மாணவி, தன் பெற்றோருடன் என்னை அணுகி, 'சார்... இந்த தொகையை நம்ம ஸ்கூல் ஆண்டுவிழா செலவுக்கு வைச்சுக்கோங்க...' என, சொன்ன போது, சில வினாடி வியப்பில் வாயடைத்து போனேன்.
சாதாரண, சாமானிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் தான் எங்கள் பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதும், பிஞ்சு மனங்களின் நெஞ்சங்களில் 'உதவும் குணம்' என்கிற ஈரம் நிரம்பியிருப்பதை கண்டு பெருமைப்பட்டோம். குழந்தைகளின் அந்த நற்குணத்தை பெற் றோரும் ஊக்குவிக்கின்றனர் என்பது, இன்னும் ஆறுதலான விஷயம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது போல, வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல், பிஞ்சு வயதிலேயே உதவும் குணம், நேரம் தவறாமை, கீழ்படிதல் உள்ளிட்ட பண்புகளை குழந்தைகளின் நெஞ்சில் விதைப்பதன் வாயிலாக தான், வளமான, நலமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதற்கு, இப்பள்ளி ஒரு உதாரணமாய் விளங்கி, திருப்பூர் மாநகராட்சிக்கு பெருமை சேர்த்து வருகிறது.
இம்மாதம், 14ம் தேதி கோலாகலமாக ஆண்டு விழா கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறது இப்பள்ளி.