/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குழந்தை விஞ்ஞானி' பட்டம் வென்ற மாணவியர்
/
'குழந்தை விஞ்ஞானி' பட்டம் வென்ற மாணவியர்
ADDED : பிப் 23, 2025 02:28 AM

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 மாணவியர் இனியாஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர், 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை' குறித்து அறிவியல் ஆய்வுக் கட்டுரை தயாரித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் நிறுவனம், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு மற்றும் செஸ்டாட்ஸ் சார்பில் மண்டல அளவில் இக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் மற்றும் 'குழந்தை விஞ்ஞானி' பட்டமும் வழங்கப்பட்டது.
இனியாஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகியோர் கூறியதாவது:
'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் குறித்து எங்கள் ஆய்வை கட்டுரை வடிவில் அளித்தோம். குடிநீர் என்பது அவசியமான, அத்தியாவசியான பொருள். இதில் உள்ள தாது உப்பு தான் அதன் தன்மையை வெளிப்படுத்தும்.
இது அதிகமாகவோ, குறைவாகவோ இல்லாமல் தேவையான அளவு இருக்க வேண்டும். நவீன முறையில் தற்போது ஆர்.ஓ., பயன்படுத்துகின்றனர். இதில் சாதாரண தண்ணீர் எதிர் சவ்வூடு முறையில், 80 சதவீதம் கழிக்கப்பட்டு, 20 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இதில் எதிர் சவ்வூடு முறையில் சுத்திகரிப்பதால், இதனை பருகுவோர் இதயம், நரம்பு மண்டலம், மூட்டுவலி, மலட்டுத் தன்மை பாதிப்பை சந்திக்கின்றனர்.
தொடர்ந்து பருகுவதால் நம் உடலில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் அளவு குறைந்து நோய் பாதிப்பு ஏற்படும். இதற்குப் பதிலாக இயற்கை முறையில், தேற்றாங்கொட்டை, வெட்டிவேர் பயன்படுத்தி சுத்திகரிப்பு செய்யலாம். மேலும், சூரிய ஒளிக்கதிரில் 15 நிமிடம் வைக்கப்படும் நீரில் நுண்கிருமிகள் அழிந்து துாய்மையாக மாறும். இது குறித்து எங்களின் மூன்று மாத ஆய்வுகளின் முடிவு அடிப்படையில் இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

